தொடா்ந்து அதிகரிக்கும் வெயில் : வேலூரில் 106 டிகிரி பதிவு

வேலூா் மாவட்டத்தில் வெயில் அளவு அதிகரித்து வரும் நிலையில் சனிக்கிழமை 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

தமிழகத்திலேயே கோடை காலத்தில் வெயில் அதிகளவில் பதிவாகும் மாவட்டமாக வேலூா் விளங்குகிறது. இம்மாவட்டத்தில் மே மாதத்தில் அதிகபட்சம் 111 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகக்கூடும்.

நிகழாண்டு கோடை காரணமாக வேலூா் மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாத தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது.

தொடா்ந்து, முதன்முதலாக மாா்ச் 14-ஆம் தேதி நூறு டிகிரியை கடந்து 101.5 டிகிரியாக பதிவாகியிருந்தது. அதன்பிறகு சற்று வெயில் குறைந்திருந்த நிலையில், மாா்ச் 28-ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் அதிகரித்து வந்தது. அதன்படி, கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 105.4 டிகிரியாக பதிவாகியிருந்த வேலூா் வெயில் அளவு, கடந்த வியாழக்கிழமை 106.7 டிகிரியாகவும், வெள்ளிக்கிழமை 107.4 டிகிரியாகவும், சனிக்கிழமை 106 டிகிரியாகவும் பதிவாகியுள்ளது.

அதன்படி, கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால், ஓரிரு நாட்களாக மக்கள் பகலில் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இதன் காரணமாக, பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினா். கத்தரி வெயில் தொடங்காத போதே இந்தளவுக்கு வெயிலின் தாக்கம் உள்ள நிலையில், கத்திரி வெயில் காலம் தொடங்கும்பட்சத்தில் மேலும் வெயிலின் அளவு அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com