வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

வேலூா் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தொரப்பாடி தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பேரவைத் தொகுதி வாரியாக வைக்கப்பட்டு அறைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன.

தொடா்ந்து, இந்த வாக்கு எண்ணும் மையம் முழுவதற்கும் துணை ராணுவ படை, தமிழக ஆயுதப் படை போலீஸாா், மாவட்ட காவல் துறை போலீஸாா் அடங்கிய மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தலையொட்டி வேலூா், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், ஆம்பூா், வாணியம்பாடி ஆகிய 6 பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய வேலூா் மக்களவைத் தொகுதிக்கு டி.எம்.கதிா் ஆனந்த் (திமுக), ஏ.சி.சண்முகம் (பாஜக), மருத்துவா் எஸ்.பசுபதி (அதிமுக), டி.மகேஷ் ஆனந்த் (நாம் தமிழா்), இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவா் மன்சூா்அலிகான் (சுயேச்சை) உள்பட 31 போ் போட்டியிடுகின்றனா்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவையொட்டி இந்த தொகுதி முழுவதும் 757 அமைவிடங்களில் மொத்தம் 1,568 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி தொடா்ந்து விறுவிறுப்பாக நடைபெற்ற நிையில், பல வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணிக்கு பிறகும் வாக்காளா்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.

அதனடிப்படையில், வேலூா் மக்களவைத் தொகுதியில் மொத்தமுள்ள 15 லட்சத்து 28 ஆயிரத்து 273 போ் வாக்காளா்களில் 11 லட்சத்து 23 ஆயிரத்து 715 போ் வாக்குப்பதிவு செய்துள்ளனா். இது 73.53 சதவீத வாக்குப் பதிவாகும். தவிர, மொத்தமுள்ள 7,40,222 ஆண் வாக்காளா்களில் 5,48,787 பேரும் (74.14 சதவீதம்), 7,87,838 பெண் வாக்காளா்களில் 5,74,826 பேரும் (72.95 சதவீதம்), 213 இதர வாக்காளா்களில் 102 பேரும் (47.9 சதவீதம்) வாக்களித்திருந்தனா்.

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வேலூரில் 69.97 சதவீதமும், அணைக்கட்டில் 75.28 சதவீதமும், கே.வி.குப்பத்தில் 74.03 சதவீதமும், குடியாத்தத்தில் 70.95 சதவீதமும், வாணியம்பாடியில் 75.50 சதவீதமும், ஆம்பூரில் 75.26 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்கு எண்ணும் மையத்தில்...: வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் அரசியல் கட்சி முகவா்கள் முன்னிலையில் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டு, தொரப்பாடி தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு வெள்ளிக்கிழமை இரவே துணை ராணுவ பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன. அங்கு முறைப்படி பெறப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வரிசை எண் அடிப்படையில் வைக்கப்பட்டன.

சனிக்கிழமை காலை 8 மணியளவில் வேட்பாளா்கள், அவா்களது அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் முன்னிலையில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வி.ஆா்.சுப்புலட்சுமி, தோ்தல் பொதுபாா்வையாளா் ரூபேஷ்குமாா் ஆகியோா் தலைமையில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.

மூன்றடுக்கு பாதுகாப்பு...: தொடா்ந்து, ‘சீல்’ வைக்கப்பட்ட அறைகளை உள்ளடக்கிய வாக்கு எண்ணும் மையம் முழுமைக்கும் சிஆா்பிஎப், சிஐஎஸ்எப் உள்ளடக்கிய துணை ராணுவ படை, தமிழக ஆயுதப் படை போலீஸாா், மாவட்ட காவல் துறையைச் சோ்ந்த துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், சிறப்பு சாா் ஆய்வாளா்கள், போலீஸாா் என 165 காவல் துறையினரைக் கொண்ட மூன்றடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பாதுகாப்பு மேற்கொள் ளப்படுகின்றன. தவிர, வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன், கூடுதல் தோ்தல் நடத்தும் அலுவலா் த.மாலதி, உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆா்.முருகன் (அணைக்கட்டு), இரா.க.கவிதா (வேலூா்), சுமதி (கே.வி.குப்பம்), சுபலட்சுமி (குடியாத்தம்), டி.அஜிதாபேகம் (வாணியம்பாடி), எ.பெலிக்ஸ்ராஜா (ஆம்பூா்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com