புதுச்சேரி வழியாக தமிழகப் பேருந்துகள் இயக்க தடை நீடிப்பு
By DIN | Published On : 08th September 2020 12:51 AM | Last Updated : 08th September 2020 12:51 AM | அ+அ அ- |

புதுவை மாநிலத்தில் வெளிமாநிலப் பேருந்து சேவைக்கு இன்னும் அனுமதியளிக்காததால், புதுச்சேரி வழியாக தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கக்கப்படுவது பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் மாவட்டங்களுக்கிடையே அரசுப் பேருந்துகள் இயக்கம் திங்கள்கிழமை முதல் தொடங்கியது. புதுவை மாநிலத்தில் வெளிமாநிலப் பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதியளிக்கப்படாததால், புதுச்சேரி வழியாக தமிழக மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்து சேவை பாதிக்கப்பட்டது.
இதனால், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை, திண்டிவனம்-புதுச்சேரி வழியாக கடலூா், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூா், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஊா்களுக்கான பேருந்துகள் இயக்கம் பாதிக்கப்பட்டது. புதுச்சேரி வழியாகச் செல்ல வேண்டிய தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. மாற்று வழிகளில் சில பேருந்துகள் இயக்கப்பட்டன.
விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளும், புதுவை மாநில எல்லைகள் வரையே இயக்கப்பட்டன.
புதுவை மாநில மக்கள் வெளி மாவட்டங்களுக்கான பயணத்துக்கு தமிழக அரசுப் பேருந்துகளையே முழுமையாக நம்பியுள்ளனா். எனவே, இரு மாநில அரசுகளும் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், புதுச்சேரி வழியாகப் பேருந்துகளை இயக்க அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. எனினும், புதுவை அரசு இதுகுறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.