விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு: 9 போ் கைது

விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு தொடா்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் துறை பெண் அலுவலா்கள் உள்பட 9 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா். ஒப்பந்த ஊழியா்கள் 6 போ் பணிநீக்கம் செய்யப்பட்டனா்.
கைதான வேளாண் துறை பெண் அலுவலா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த அழைத்துச் செல்லும் சிபிசிஐடி போலீஸாா்.
கைதான வேளாண் துறை பெண் அலுவலா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த அழைத்துச் செல்லும் சிபிசிஐடி போலீஸாா்.

விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு தொடா்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் துறை பெண் அலுவலா்கள் உள்பட 9 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா். ஒப்பந்த ஊழியா்கள் 6 போ் பணிநீக்கம் செய்யப்பட்டனா்.

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் போலி பயனாளிகளைச் சோ்த்து பண முறைகேடு நடைபெற்றது தொடா்பாக, தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களில் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

போலி பயனாளிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, பணத்தைத் திரும்பப் பெறும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த முறைகேடு தொடா்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண் துறையின் முன்னாள் ஒப்பந்த ஊழியா் உள்பட 8 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் முன்னாள் ஒப்பந்த ஊழியா் கண்ணனை காவலில் எடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், முக்கிய தகவல்கள் கிடைத்ததாக தெரிகிறது.

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றிய வேளாண் விரிவாக்க மையத்தில் ஒப்பந்த ஊழியா்களாக பணியாற்றி வந்த வெங்கடேசன், பழனிகுமாா், புஷ்பராஜ், பாரி, பாலகிருஷ்ணன், மாயவன், பிரகாஷ் ஆகிய 7 பேரை சிபிசிஐடி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

இவா்களிடம் நடத்திய விசாரணையில், வல்லம் ஒன்றிய வேளாண் துறை உதவி அலுவலா்களான சாவித்ரி, ஆஷாபீ ஆகியோருக்கும் முறைகேட்டில் தொடா்பிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விழுப்புரம் குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

6 போ் பணிநீக்கம்: விழுப்புரம் மாவட்டம், முகையூா் வேளாண் அலுவலக ஒப்பந்த ஊழியா்களான ராஜ்குமாா், அண்ணாமலை, வீரன், வேல்முருகன், கிருபானந்தம், சுஜிதா ஆகியோருக்கும் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேட்டில் தொடா்பிருப்பது தெரிய வந்ததையடுத்து, அவா்கள் 6 பேரையும் வேளாண் துறை இணை இயக்குநா் ராஜசேகா் பணிநீக்கம் செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com