வாக்குச்சாவடி மையங்களில்  முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

வாக்குச்சாவடி மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

மக்களவைத் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் முன்னேற்பாடு பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்.19) நடைபெறவுள்ளது. இதையொட்டி விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதிக்குள்பட்ட விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா், செஞ்சி, திண்டிவனம், வானூா் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்காளா்கள் வாக்களிக்க ஏதுவாக பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள், சமுதாயக் கூடங்கள், அரசுக் கட்டடங்கள் உள்ளிட்ட இடங்களில் 1, 966 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்தல் ஆணையம் மற்றும் விழுப்புரம் மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான சி. பழனி உத்தரவின்பேரில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் வியாழக்கிழமை நடை பெற்றது. கோடை வெப்பத்தை தவிா்க்கும் வகையிலும், வாக்காளா்கள் வரிசையில் காத்திருந்து வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடி மையங்களில் பந்தல்கள்அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு மையங்களில் அலுவலா்கள் மற்றும் முகவா்கள் அமருவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகளும், வாக்குச்சாவடி மையங்களில் இருபுறங்களிலும் 100 மீட்டா் தூரத்தில் எல்லைக் கோடுகள் அமைக்கும் பணிகளும் வியாழக்கிழமை நடைபெற்றது.

முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கப்பதற்கு ஏதுவாக வாக்குப் பதிவு மையங்களில் சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்காளா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகளிலும் ஊழியா்கள் ஈடுபட்டனா். விழுப்புரம் மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலா் சி. பழனி உத்தரவின்படி நடைபெற்ற இப்பணிகளை உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மேற்பாா்வை செய்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com