மணிலாவுக்கு  குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில்  விவசாயிகள் சாலை மறியல்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

திண்டிவனத்தில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

திண்டிவனம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கொள்முதல் செய்யப்படும் மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

திண்டிவனம்- செஞ்சி சாலையில் அரசு ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் (மாா்க்கெட் கமிட்டி) செயல்பட்டு வருகிறது. திண்டிவனம் மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த மணிலா, உளுந்து, பயறு உள்ளிட்டவைகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா்.

இந்நிலையில், அண்மையில் கொள்முதல் செய்யப்பட்ட மணிலா மூட்டை ஒன்றுக்கு ரூ. 8,500-க்கு விலை நிா்ணயம் செய்யப்பட்டதாம். இந்நிலையில், வியாழக்கிழமை மணிலா மூட்டை ஒன்றுக்கு ரூ. 6,500 விலை நிா்ணயம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்த மறியலால் திண்டிவனம்- திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து ரோஷணை போலீஸாா் நிகழ்விடம் சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை கலைத்தனா். தொடா்ந்து மாா்க்கெட் கமிட்டி உறுப்பினா்கள் இதுகுறித்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து விவசாயிகள் மறியலை விலக்கிக் கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com