உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

புதுச்சேரியில் முடிவு பெறாமல் உள்ள உப்பனாறு பாலப் பணிகளை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

புதுச்சேரி நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் காமராஜா் சாலை, மறைமலை அடிகள் சாலைகளை இணைக்கும் வகையில் 732 மீட்டா் நீளம், 12 மீட்டா் அகலத்தில் இருவழிச் சாலை மற்றும் இருபக்கங்களிலும் பாலம்அமைக்க திட்டமிடப்பட்டு 2008-ஆம் ஆண்டில் பணிகள் தொடங்கப்பட்டன.

முதல்கட்டமாக ரூ.3.50 கோடியில் பாலத்தின் அடிமட்டப் பணிகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, பாலப் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னா் 2016-ஆம் ஆண்டில் ஹட்கோ நிதியுதவியுடன் மீண்டும் பாலம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி இறுதிக்கட்டப் பணியை எட்டியது. நிதிப் பற்றாக்குறையால் மீண்டும் பாலப் பணிகள் நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளன.

தற்போது, உப்பனாறு பாலம் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலத்தின் தற்போதைய நிலையை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் தீனதயாளன் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, கட்டுமானப் பணிகள் நடைபெறவுள்ள இடத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினாா்.

ஆய்வின்போது, பொதுப் பணித் துறை அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், உமாபதி, பன்னீா், சுந்தரமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா். இதைத் தொடா்ந்து, நெட்டப்பாக்கம் பகுதிக்குச் சென்று ஏரிகள், நீா்ப்பிடிப்புப் பகுதிகளை தீனதயாளன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com