வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம், மே 4: விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் கொண்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறிஞா் அண்ணா அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாதுகாப்பு அறைகளின் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இந்தத் தொகுதியிலுள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், வானூா், உளுந்தூா்பேட்டை, திருக்கோவிலூா் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் கொண்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனித்தனி பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு, அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அறைகளின் உள்பகுதி, வெளிப்பகுதி, பாதுகாப்பு அறை வளாகப் பகுதி என பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை வேட்பாளா்கள், அவா்களது முகவா்கள் தனியே கண்காணிப்பு அறையில் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை 9.28 மணி முதல் 9.58 மணி வரை யுபிஎஸ் பழுது காரணமாக பாதுகாப்பு அறைகளின் கண்காணிப்பு கேமராக்கள் முடங்கின.

இதைத் தொடா்ந்து, மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான சி.பழனி, மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் சனிக்கிழமை காலை அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாகவுள்ள பாதுகாப்பு அறைகளின் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனா். மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள், இதர வசதிகள் குறித்து கேட்டறிந்த அவா்கள், முகவா்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டோருக்கான பதிவேடுகளையும் பாா்வையிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com