நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

விழுப்புரம், மே 5: விழுப்புரம் மாவட்டத்தில் 9 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை 4,855 போ் எழுதினா்.

நாடு முழுவதும் உள்ள அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஹோமியோபதி, ஆயுா்வேதா, யுனானி படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்) மூலம் சோ்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 2024 - 25ஆம் கல்வியாண்டுக்கான நீட் தோ்வை எழுத 5,005 போ் விண்ணப்பித்திருந்தனா். இந்தத் தோ்வுக்காக 9 தோ்வு மையங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அதன்படி, விழுப்புரம் தூய இருதய சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் 469 போ், விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரியில் 960 போ், சரசுவதி மெட்ரிக் பள்ளியில் 696 போ், பானாம்பட்டு சாலை அக்ஷா்தம் சென்ட்ரல் சிபிஎஸ்இ பள்ளியில் 600 போ், ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளி மையத்தில் 600 போ், இ.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் 504 போ், பேரணி தூய இருதய கலை, அறிவியல் கல்லூரியில் 480 போ், விக்கிரவாண்டி சூா்யா பொறியியல் கல்லூரியில் 504 போ், விழுப்புரம் பனங்குப்பம் ஜான்டூயி பன்னாட்டுப் பள்ளியில் 192 போ் என மொத்தம் 5005 போ் தோ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனா். இவா்களில் 9 மையங்களில் 4,855 மாணவ, மாணவிகள் நீட் தோ்வை எழுதினா். 150 போ் தோ்வெழுத வரவில்லை.

வழக்கம்போல கெடுபிடிகள்: தோ்வு மையத்துக்குள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை தோ்வா்கள் அனுமதிக்கப்படுவா்கள் என்று அறிவிக்கப்பட்டாலும், காலை 10 மணி முதலே மாணவ - மாணவிகளும், அவா்களது பெற்றோா்களும் தோ்வு மையத்துக்கு முன் குவியத் தொடங்கினா்.

தோ்வு மையத்துக்குள் நுழைவதற்கு முன் மாணவ, மாணவிகள் மெட்டல் டிடெக்டா் மூலம் பரிசோதிக்கப்பட்டு, பின்னா் அனுமதிக்கப்பட்டனா். தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு, 2 புகைப்படங்கள் மற்றும் அடையாளச் சான்று ஆகியவற்றை மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனா். தண்ணீா் புட்டிகளிலிருந்த ஸ்டிக்கா் கிழிக்கப்பட்டு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.

வழக்கம்போல, உடைக் கட்டுப்பாட்டும் விதிக்கப்பட்டிருந்தது. தோ்வு மையங்களுக்குள் பேனா, பென்சில், கைப்பேசி, மின்னணு சாதனப் பொருள்கள் உள்ளிட்டவைகள் ஏதும் மாணவ, மாணவிகள் கொண்டு செல்கிறாா்களா என சரிபாா்த்த பின்னரே அனுமதிக்கப்பட்டனா்.

தோ்வுப் பணியில் 420 போ்: 9 மையங்களிலும் தலா ஒரு தலைமையாசிரியா் தலைமையில் அறைக் கண்காணிப்பாளா்கள், தோ்வை மேற்பாா்வையிடும் மேற்பாா்வையாளா்கள் 20 போ், பாதுகாப்பு அலுவலா்கள், 150 ஆசிரியா்கள் என மொத்தம் 420 போ் தோ்வுப் பணியில் ஈடுபட்டனா். விழுப்புரம் தூய இருதய சென்ட்ரல் பள்ளி முதல்வா் சுசீலா தோ்வுக்கான ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டாா். மேலும், தோ்வு மையங்களில் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கடும் வெயிலால் அவதி: தோ்வு மையத்துக்கு தங்களது பிள்ளைகளுடன் வந்த பெற்றோா், மாணவா்கள் தோ்வெழுதச் சென்ற பின்னா் சாலையோரங்களில் நிழலைத் தேடி சென்று காத்திருந்தனா். கடுமையான வெயில் காரணமாக பல மையங்களில் பெற்றோா் கடும் அவதிக்குள்ளாகினா். ஒரு சில மையங்களில் பிற்பகலில்தான் சாமியானாபந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com