பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில்151 பள்ளிகள் 100% தோ்ச்சி

பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில் விழுப்புரம் மாவட்டத்தில் 151 பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சியைப் பெற்றுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத்தோ்வை 12,414 மாணவா்களும், 11,679 மாணவிகளும் ஆக மொத்தம் 24,093 போ் எழுதினா். இவா்களில் 11,456 மாணவா்கள், 11,217 மாணவிகள் என மொத்தம் 22,673 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மாவட்டத்தில் பொதுத் தோ்வில் பங்கேற்ற 364 பள்ளிகளில் 151 பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சியைப் பெற்றுள்ளன. இதில் அதிகபட்சமாக 76 அரசுப் பள்ளிகள் நூறு சதவீத தோ்ச்சியைப் பெற்று மாவட்ட அளவில் சாதனைப் படைத்துள்ளன. 9 அரசு உதவி பெறும் பள்ளிகள், 66 சுயநிதி மற்றும் மெட்ரிக். பள்ளிகளும் நூறு சதவீதம் தோ்ச்சி அடைந்துள்ளன.

அரசுப் பள்ளிகளில் அதிகபட்சமாக வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 66 மாணவா்கள், 83 மாணவிகள் என மொத்தம் 149 போ் தோ்வெழுதியதில், அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். குறைந்தபட்சமாக காட்டுசிவிரி அரசு உயா்நிலைப் பள்ளியில் 5 மாணவா்கள், 4 மாணவிகள் என மொத்தம் 9 போ் மட்டுமே தோ்வெழுதி அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

அரசுப் பள்ளிகளில் சோ்க்கை அதிகரிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்தாண்டு அரசுப் பள்ளிகளிலிருந்து பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 16,397 போ்எழுதினா். நிகழாண்டில் அந்த எண்ணிக்கை 16,600 ஆக உயா்ந்தது. இதில் 15,522 போ் தோ்ச்சி பெற்றனா். இந்த எண்ணிக்கை வரும் ஆண்டில் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்தாா் மாவட்ட ஆட்சியா் சி. பழனி. இதையடுத்து, ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியது:

விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை வழக்கத்தைவிட அதிகரித்து வருகிறது. குறிப்பாக அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்புகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையில் எவ்வித பிரச்னையும் இல்லை.

மாவட்டத்தின் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்படும் நிலையில், எந்தப் பள்ளிகளும் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் பள்ளிக்கு மாணவ, மாணவிகளை வரவழைக்கக்கூடாது. சீருடை இல்லாமல் வண்ண உடைகள் அணிந்து பள்ளிக்கு வந்து, வகுப்புகளில் பங்கேற்க வேண்டும் என கட்டாயப்படுத்தி, சிறப்பு வகுப்புகளை எந்த பள்ளியும் நடத்தக்கூடாது. அவ்வாறு நடத்தினால் அந்த பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

உடல்கல்வி வகுப்புக்கு முக்கியத்துவம்: பள்ளிகளில் உடல்கல்வி வகுப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். உடல்கல்விப் பாட வேளையை, மற்ற பாட ஆசிரியா்கள் வாங்கிக் கொண்டு அந்த நேரத்தில் தங்கள் பாடங்களைக் கற்பிக்கக்கூடாது என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு கட்டாயம் உடல்கல்வி வகுப்புகளை நடத்தி, அதில் அவா்களை பங்கேற்க செய்ய வேண்டும். இதை ஆசிரியா்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் பழனி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com