கடல்நீர் உள்புகுவதைத் தடுக்க கொள்ளிடம் ஆற்றில் தரைமட்ட தடுப்பணை அமைக்கப்படுமா?

கொள்ளிடம் ஆற்றில் கடல்நீர் உள்புகுவதைத் தடுக்க தரைமட்ட தடுப்பணை அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 
 கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உள்புகுவதை தடுப்பது குறித்த வரைபடம்.
 கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உள்புகுவதை தடுப்பது குறித்த வரைபடம்.

கொள்ளிடம் ஆற்றில் கடல்நீர் உள்புகுவதைத் தடுக்க தரைமட்ட தடுப்பணை அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 திருச்சிக்கு மேற்கே முக்கொம்பு அருகே பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட மேல் அணையிலிருந்து பிரிந்து உருவாகிறது கொள்ளிடம் ஆறு. இந்த ஆறு கல்லணையிலிருந்தும் இணைப்பு பெற்று திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களின் எல்லை வழியாக 168 கி.மீ. தொலைவு பயணித்து, கடலூர் மாவட்டம் கொடியம்பாளையம் கிராமத்துக்கும், நாகை மாவட்டம், மகேந்திரப்பள்ளி கிராமத்துக்கும் இடையே கடலில் கலக்கிறது.
 மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி பாசன நீர், கல்லணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு, கீழணையில் தேக்கப்பட்டு கடலூர், நாகை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் 1,34,304 ஏக்கர் விளை நிலங்களுக்கு நீராதாரமாக விளங்குகிறது.
 கீழணையை அடுத்து கொள்ளிடம் ஆற்றில் கடற்கரை முகத்துவாரம் வரை வேறு கதவணைகளோ, தடுப்பணைகளோ இல்லை. இதனால் கீழணையில் திறக்கப்படும் உபரி நீர் நேரடியாகக் கடலில் சேரும். கடலூர், நாகை மாவட்டங்களின் கடைமடை விவசாயிகளின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கிய கொள்ளிடம் ஆறு, தற்போது உப்பு நீர் உள்புகும் பகுதியாக மாறி விவசாயிகளை கலக்கமடையச் செய்துள்ளது.
 முன்பு, அணைக்கரைக்கு மேலே கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் கிடைக்கும் மழை நீர், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் பாசனநீர் கீழணையில் 9 அடி வரை தேக்கி வைக்கப்படும். இந்தத் தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் 3 கி.மீ. தொலைவு வரை பரவலாக தேங்கி நிற்கும்.
 இந்த தண்ணீர் பூமிக்கடியில் உள்புகும். பின்னர் பூமியில் உள்புகுந்த தண்ணீர், தேக்கப்பட்டுள்ள நீரின் அழுத்தம் காரணமாக, கீழணையின் கீழ் புறம் ஆற்றின் நீர் வழித் தடத்தில் ஒரு சில கி.மீ. தொலைவுக்கு அப்பால் மேலெழும்பி சிறிய நீரோடையாக ஓடும். அவ்வாறு ஓடும் ஊற்று நீர் தடையேதும் இல்லாமல் கடலில் கலப்பது இயற்கையாக நடைபெறும் செயலாகும்.
 இதனால், முகத்துவாரத்தில் உப்புநீரின் ஊடுருவல் தடுக்கப்பட்டு, கடலோர சூழல் பாதுகாக்கப்படும். நிலத்தடி நீரின் தன்மை மாறுவது தடுக்கப்படும்.
 தற்போது அணைக்கரையின் பாசனத்துக்கே போதிய தண்ணீர் வழங்க முடியாத சூழலில், அணையில் சிறிதளவே தண்ணீரை தேக்கி வத்திருப்பதால் ஊற்று நீரும் அதிகம் கடலுக்குச் செல்வதில்லை. உப்புநீர் ஊடுருவல் காரணமாக கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் நிலத்தடி நீரின் தன்மை மாறுபட்டுள்ளது.
 கொள்ளிடம் ஆற்றில் இருந்து கடந்த காலங்களில், குறிப்பாக 2003, 2016 ஆகிய இரு ஆண்டுகளில் தண்ணீர் கடலுக்குச் செல்லவில்லை. ஆனால் மற்ற ஆண்டுகளில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கடலுக்குச் சென்று கலந்ததால் உப்புநீரின் தாக்கம் குறைவாக இருந்தது.
 ஆனால், 2003-ஆம் ஆண்டு உப்புநீரின் தாக்கம் இருந்தது. 2012-ஆம் ஆண்டு 23 சதவீதமும், 2013-ஆம் ஆண்டு 19 சதவீதமும் மழை குறைவாகப் பெய்ததால் 2014-ஆம் ஆண்டு கொள்ளிடக்கரையோர நிலத்தடி நீர் உப்பாக மாறியது. இதனால் ஆள்துளைக் கிணறு மூலம் தண்ணீர் இறைத்து குறுவை சாகுபடி செய்த விளை நிலங்களில் பயிர்கள் வீணாகின.
 அதேபோல, 2016-ஆம் ஆண்டு மழை பொய்த்துப் போனதாலும் 2017-ஆம் ஆண்டு 1.55 டிஎம்சி குறைந்த அளவே தண்ணீர் கடலுக்குச் சென்றதாலும் உப்புநீரின் தாக்கம் அதிகமாக உள்ளது.
 இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநிலச் செயலர் பெ.ரவீந்திரன் கூறியதாவது:
 முன்பு ஆண்டுதோறும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அடித்து செல்லப்பட்ட மணல் முழுவதும் ஆற்றின் மையப்பகுதில் படிந்துள்ளது. ஆனால் ஆற்றின் வலது, இடது கரைகள் வெள்ளத்தின்போது ஏற்பட்ட மண் அரிப்பால் நிர்ணயிக்கப்பட்ட ஆற்றின் படுகை மட்டம் 8 அடி முதல் 24 அடி வரை குறைந்துள்ளது. இதனால், கடல் நீர் மட்டம் உயரும்போது கடல் நீர் ஆற்றின் இருபுற கரையோரம் மண் அரிப்பால் ஏற்பட்ட நீரோடை வழியாக சுமார் 27 கி.மீ. தொலைவு ஓடிவருவதும், கடல்மட்டம் குறையும் போது குறிப்பிட்ட அளவு கடல்நீர் கடலுக்கு திரும்புவதும், பெரும்பான்மையான கடல்நீர் நீரோடையில் ஆழம் அதிகமுள்ள பள்ளங்களில் தேங்கிவிடுவதும் வழக்கமாகிறது.
 கரையோரம் தேங்கியுள்ள உப்பு தண்ணீர் ஆற்று மணல் மூலமாகவும், பக்கவாட்டு கரை மண்ணின் வழியாகவும் நிலப் பரப்பில் ஊடுருவி நிலத்தடி நீரை பாழ் படுத்துகிறது.
 இதனால் கொள்ளிடம் ஆற்றின் இடதுபுறக் கரையோரம் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சீர்காழி, மயிலாடுதுறை வட்டங்களுக்கு உள்பட்ட மகேந்திரப்பள்ளி, அளக்குடி, முதலைமேடு திட்டு, நாதல்படுகை, திட்டுப்படுகை, சந்தப்படுகை, கொள்ளிடம், மாதிரவேளூர், சென்னிய நல்லூர், பணங்காட்டாங்குடி சித்தமல்லி, உள்ளிட்ட 40 கிராமங்களிலும், ஆற்றின் வலது புறக்கரையோரம் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களுக்கு உள்பட்ட குண்டலப்பாடி, ஜெயங்கொண்டப்பட்டிணம், பெராம்பட்டு, சிவபுரி, திட்டுக்காட்டூர், வேளக்குடி, வல்லம்படுகை, வடக்குமாங்குடி, தெற்குமாங்குடி, எருக்கன்காட்டுப்படுகை, கருப்பூர், கத்திரிமேடு, அத்திப்பட்டு, ஆலம்பாடி, நளம்புத்தூர், முள்ளங்குடி, நந்திமங்கலம், பருத்திக்குடி, வெள்ளூர், அரசூர், புளியங்குடி உள்ளிட்ட 45 கிராமங்களிலும் நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டதால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் நல்ல தண்ணீர் கிடக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
 மேலும், கொள்ளிடம் ஆற்றில் நாகை மாவட்ட மக்களுக்கான சித்தமல்லி, இளந்தோப்பு, மணல்மேடு, கடலங்குடி, கடலூர் மாவட்ட மக்களுக்கான நளன்புத்தூர், தில்லைநாயகபுரம், எய்யலூர் ஆகிய இடங்களில் செயல்படும் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 இதுகுறித்து தமிழக அரசை பலமுறை வலியுறுத்தியதால், 2014-ஆம் ஆண்டு மயிலாடுதுறை காவிரி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் மூலம் ஆய்வு செய்து, சந்தப்படுகை கிராமத்துக்கு உள்பட்ட திருமைலாடி என்ற இடத்தில் தடுப்பணை அமைக்க ரூ.1.12 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
 தொடர்ந்து கடலூர் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியதால் தற்போது கொள்ளிடம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் மூலம் ஆய்வு செய்து, தரைமட்ட தடுப்பணை அமைக்க ரூ.2.50 கோடியில் திட்ட மதீப்பீடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராம மக்களின் வாழ்வாதாரத்தை காக்கவும், ஆற்றில் உள்புகும் கடல்நீரை தடுக்கவும் கொள்ளிடம் ஆற்றின் முகத்துவாரத்தில் தரை மட்ட தடுப்பணை அமைக்க வேண்டும். இதற்காக தமிழக அரசு தாமதமின்றி நிதி ஒதுக்கீடு செய்து திட்டப் பணியை தொடங்க வேண்டும் என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com