"காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது' 

கர்நாடகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்காது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

கர்நாடகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்காது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
 தூத்துக்குடியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், மாநிலச் செயலராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து முதல் முறையாக தனது சொந்த ஊரான சிதம்பரத்துக்கு புதன்கிழமை இரவு வருகை தந்தார். அவருக்கு கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அம்பேத்கர், பெரியார், சுவாமி சகஜானந்தா சிலைகளுக்கு கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் 40 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டன. மேலும், தமிழகத்தில் எதிர்கால அரசியல் சூழ்நிலைகளை எப்படி கையாள்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
 மத்தியில் ஆளும் பாஜக அரசு மோசமான பொருளாதாரக் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. ஆளுநரைப் பயன்படுத்தி போட்டி அரசை தமிழகத்தில் பாஜக நடத்தி வருகிறது. தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதை தட்டிக்கேட்க முடியாத அரசாக எடப்பாடி
 பழனிசாமி அரசு உள்ளது. பாஜகவின் கைப்பாவையாக மாறியுள்ளது அதிமுக அரசு. எனவே, பாஜகவையும், அதிமுகவையும் எதிர்த்து கூர்முனையான போராட்டத்தை நடத்துவது என மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.
 தாய்மொழி தினத்தில் பிரதமர் மோடி தமிழ் சிறந்த மொழி எனக் கூறியுள்ளார். ஆனால், ஆட்சி மொழியாகவும், நீதிமன்ற வழக்கு மொழியாகவும் தமிழ் ஏற்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது. தமிழ் மொழியில் படித்தால் வேலை கிடைக்காது என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ் மொழியின் உரிமையை நிலைநாட்ட தொடர் போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும். தூத்துக்குடியில் நடைபெற்ற மாநாட்டில் பேரணியாகச் சென்ற செந்தொண்டர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியது மிகவும் கண்டனத்துக்குரியது.
 கர்நாடகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் பிரதமர் மோடி ஓட்டுக்காக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்கமாட்டார் என்றார் கே.பாலகிருஷ்ணன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com