மாநில கபடிப் போட்டி: திருவாரூர் அணி வெற்றி

என்எல்சி இந்தியா நிறுவனம் நடத்திய மாநில அளவிலான கபடிப் போட்டியில் திருவாரூர் மாவட்டம், வடுவூர் அணி வெற்றி பெற்றது. 

என்எல்சி இந்தியா நிறுவனம் நடத்திய மாநில அளவிலான கபடிப் போட்டியில் திருவாரூர் மாவட்டம், வடுவூர் அணி வெற்றி பெற்றது.
 இந்த நிறுவனத்தின் விளையாட்டு மேம்பாட்டு மையம் நடத்திய மாநில அளவிலான ஊரகக் கபடிப் போட்டி, மார்ச் 8-இல் தொடங்கி 10-ஆம் தேதி வரை நெய்வேலி பாரதி விளையாட்டரங்க வளாகத்தில் உள்ள நவீன கபடி ஆடுகளத்தில் நடைபெற்றது. என்எல்சி இந்தியா நிறுவன மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன் போட்டிகளை தொடக்கி வைத்தார்.
 இதில், நெய்வேலியைச் சேர்ந்த 3 அணிகள் உள்ளிட்ட 12 முன்னணி அணிகள் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பங்கேற்றன.
 காலிறுதிப் போட்டியில் மயிலாடுதுறை, பெரம்பலூர், நாகை மற்றும் வடுவூர் அணிகள் வெற்றி பெற்றன. அரையிறுதிப் போட்டியில் வென்ற வடுவூர் அணியும், பெரம்பலூர் அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.
 கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் வடுவூர் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியை, என்எல்சி இந்தியா திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநர் பி.செல்வகுமார் மற்றும் உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
 மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், என்எல்சி இந்தியா கல்வி, விளையாட்டு மற்றும் சமூகப் பொறுப்புணர்வுத் துறை தலைமைப் பொதுமேலாளர் ஆர்.மோகன், தமிழ்நாடு அமெச்சூர் கபடிக் கழக அமைப்புச் செயலர் ஆர்.ராஜராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட இயக்குநர் செல்வகுமார், போட்டியில் வெற்றி பெற்ற வடுவூர் அணி வீரர்களுக்கு ரூ.30 ஆயிரம் ரொக்கப் பரிசு, கோப்பையை வழங்கினார். 2-ஆம் இடம் பெற்ற பெரம்பலூர் வானவில் கபடிக் குழுவுக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது. அரையிறுதி போட்டிவரை விளையாடிய மயிலாடுதுறை, நாகை அணிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் ரொக்கப் பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.
 பெரம்பலூர் வானவில் அணி வீரர் எஸ்.செல்வகுமாருக்கு சிறந்த ரைடருக்கான கோப்பையும், வடுவூர் அணி வீரர் ஆர்.அரவிந்துக்கு சிறந்த பிடி வீரருக்கான கோப்பையும், வடுவூர் அணி வீரர் ஆர்.சுப்பிரமணியத்துக்கு அனைத்து வகையிலும் சிறந்த வீரருக்கான கோப்பையும் வழங்கப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com