கடலூர் மத்திய சிறையில் டிஐஜி ஆய்வு

கடலூர் மத்திய சிறையில் வேலூர் சரக சிறைத் துறை டிஐஜி கே.ஜெயபாரதி 100 போலீஸாருடன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

கடலூர் மத்திய சிறையில் வேலூர் சரக சிறைத் துறை டிஐஜி கே.ஜெயபாரதி 100 போலீஸாருடன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
கடலூர் கேப்பர்மலையில் மத்திய சிறை இயங்கி வருகிறது. இங்கு ஆண்கள், பெண்களுக்கென தனித் தனி சிறைகள் உள்ளன. இந்தச் சிறையில் சுமார் ஆயிரம் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு சட்ட விரோதமாகப் பல்வேறு சலுகைகள் கிடைத்து வருவதாகப் புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், சென்னை புழல் சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் ரௌடி பாக்ஸர் முரளி கொல்லப்பட்ட சம்பவம், சிறைகளின் பாதுகாப்பு, கண்காணிப்புகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பின. இதையடுத்து, அனைத்துச் சிறைகளும் ஆய்வுக்கு உள்படுத்தப்படுமென தமிழக முதல்வர் தெரிவித்தார்.
இந்த நிலையில், வேலூர் சரக சிறைத் துறை துணைத் தலைவர் கே.ஜெயபாரதி கடலூர் மத்திய சிறையில் சனிக்கிழமை காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். காலை 6.30 மணிக்குத் தொடங்கிய இந்த ஆய்வு காலை 8 மணி வரை நீடித்தது. சிறைக் கண்காணிப்பாளர் (பொ) கிருஷ்ணராஜ், கடலூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் த.அ.ஜோ.லாமேக், 4 காவல் ஆய்வாளர்கள், 9 உதவி ஆய்வாளர்கள் உள்பட 100 போலீஸார் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர்.
வெடிகுண்டுகளைக் கண்டறியும் இயந்திரம், மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாயுடன் வந்த காவல் துறையினர் சிறையின் ஒவ்வோர் அறையாகச் சோதனை நடத்தினர். சிறையில் தடை செய்யப்பட்ட பொருள்கள் ஏதேனும் உள்ளனவா என்றும், பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வுக்குப் பின்னர் டிஐஜி ஜெயபாரதி கூறியதாவது: இது வழக்கமான ஆய்வுதான். இந்த ஆய்வில் தடை செய்யப்பட்ட பொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. கூடுதல் விழிப்புணர்வுடன்பணியாற்ற சிறைத் துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார் அவர். முன்னதாக, கடலூர் கிளைச் சிறையிலும் அவர் ஆய்வு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com