மித வேகத்தில் சென்றால் விபத்துகளை குறைக்கலாம்: எஸ்.பி. அறிவுரை

சாலை விதிகளை மதித்து  மிதவேகத்தில் வாகன ஓட்டிகள் சென்றால் விபத்துகளை குறைக்கலாம் என்று கடலூர் மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் அறிவுறுத்தினார்.

சாலை விதிகளை மதித்து  மிதவேகத்தில் வாகன ஓட்டிகள் சென்றால் விபத்துகளை குறைக்கலாம் என்று கடலூர் மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் அறிவுறுத்தினார்.
வடலூரில் தைப்பூச பெருவிழா வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் வடலூர் வந்து ஜோதி தரிசனம் செய்வர். பொதுமக்கள் எளிதாகச் சென்று ஜோதி தரிசனம் செய்யவும், விபத்துகளை தவிர்க்கும் வகையில், போக்குவரத்து வசதி ஏற்படுத்துவதற்காகவும் சாலையின் நடுவே வைப்பதற்காக இரும்புத் தடுப்புகள் வடலூர் காவல் துறையினரிடம் வழங்கப்பட்டது. வடலூர் நுகர்வோவோர் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை, நெய்வேலி லிக்னைட் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில், வடலூரில் அண்மையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கடலூர் மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்புத் தலைவர் கோவி.கல்விராயர் தலைமை வகித்தார்.   ரோட்டரி சங்க தேர்வுத் தலைவர் வி.புருஷோத்தமன் வரவேற்றார். ரோட்டரி சங்கத் தலைவர் என்.முருகவேல், நுகர்வோர் சங்கச் செயலர் டி.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
பண்ருட்டி ரோட்டரி சங்கத் தலைவர் டி.சண்முகம் வாழ்த்துரை வழங்கி இரும்புத் தடுப்புகளை (ஃபேரி கார்டு) வழங்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பெற்றுக்கொண்டு பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: கடலூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற வேண்டும். 
குடும்பத்தில் ஒருவர் இறந்தால் பல பேர் பாதிக்கப்படுவர்.  விபத்துக்குக் காரணம், சாலை விதிகளை மதிக்காமல் அதி வேகமாக செல்வதால்தான். எனவே, சாலை விதிகளை மதித்து மிதவேகத்தில் சென்றால் விபத்துகளை குறைக்கலாம். பல்வேறு வளங்களை கொண்ட கடலூர் மாவட்டம் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது.  விழிப்புணர்வு ஏற்படுத்தினால் முதன்மை மாவட்டமாக மாற்ற முடியும் என்றார். 
நெய்வேலி டிஎஸ்பி என்.சரவணன், ரோட்டரி துணை ஆளுநர் டேவிட், ரோட்டரி இணை ஒருங்கிணைப்பாளர் இளைஞர் சேவை ஏ.எஸ்.சந்திரசேகரன் கருத்துரை வழங்கினர். 
நிகழ்ச்சியில் பண்ருட்டி ரோட்டரி சங்க தேர்வுத் தலைவர் வி.வீரப்பன், வடலூர் போக்குவரத்து காவல் உதவி ஆயவாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வடலூர் காவல் ஆய்வாளர் க.அம்பேத்கர் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com