ஆற்றில் குவிந்த நெகிழி குப்பையால் சுகாதாரக்கேடு

கடலூர் தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழாவின்போது வீசப்பட்ட நெகிழிக் குப்பைகள் பரவிக் கிடப்பதால் சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது. 

கடலூர் தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழாவின்போது வீசப்பட்ட நெகிழிக் குப்பைகள் பரவிக் கிடப்பதால் சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது. 
 தைப் பொங்கலை முன்னிட்டு கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று ஆற்றுத் திருவிழா. இந்த விழாவானது கடலூர் தென்பெண்ணையாற்றில் சனிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சுமார் 100 ஊர்களைச் சேர்ந்த சுவாமிகள் தீர்த்தமாடி, பக்தர்களுக்கு காட்சியளித்து பின்னர் மாலையில் தங்களது கோயில்களுக்கு திரும்பினர். பொங்கலின் தொடர்ச்சியாக கொண்டாடப்படும் இந்த விழாவானது ஆற்றுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் நடைபெறுவதாலும், பல ஊர்களின் உற்சவர்களை நேரில் பார்த்து வழிபடலாம் என்பதாலும் ஆயிரக்கணக்கானோர் ஆற்றில் குவிந்தனர்.
 விழா முடிந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆற்றுப் பகுதி முழுவதும் நெகிழி குப்பைகளை அதிகளவில் காண முடிந்தது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஆற்றுத் திருவிழாவில் பூஜை பொருள்கள் உள்பட பல்வேறு பொருள்களும் நெகிழிப் பைகளிலேயே  வழங்கப்பட்டன. பயன்பாட்டுக்குப் பிறகு பொதுமக்களால் வீசப்பட்ட நெகிழி குப்பைகள் ஆற்றின் கரைகளிலும், தண்ணீர் செல்லும் வழித் தடத்திலும் ஆங்காங்கே பரவிக் கிடக்கின்றன.
 நெகிழிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் கடலூர் தென்பெண்ணையாற்றில் நெகிழி குப்பைகள் கொட்டிக் கிடப்பது மாவட்டத்தில் போதுமான கண்காணிப்பு இல்லாததையும், நெகிழிப் பொருள்கள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதையுமே காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே, நெகிழிக்கான தடையை மாவட்ட நிர்வாகம் கண்டிப்பான முறையில் அமல்படுத்த வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com