60 ஆதிதிராவிடர் விடுதிகளில் மாணவர் சேர்க்கை

கடலூர் மாவட்டத்தில் உள்ள 60 ஆதிதிராவிடர் விடுதிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


கடலூர் மாவட்டத்தில் உள்ள 60 ஆதிதிராவிடர் விடுதிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை கட்டுப்பாட்டின் கீழ் ஒரு முதுநிலைப் பட்டதாரி கல்லூரி மாணவர் விடுதி, தலா 3 கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகள், 2 தொழில்பயிற்சி மாணவர் விடுதி, ஒரு தொழில்பயிற்சி மாணவிகள் விடுதி, 31 பள்ளி மாணவர்கள் விடுதி, 19 பள்ளி மாணவிகள் விடுதி என மொத்தம் 60 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த விடுதிகளில் இந்து ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 85 சதவீதமும், பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, சீர்மரபினர் 10 சதவீதமும், இதர வகுப்பினர் 5 சதவீதமும் சேர்ந்து பயனடையலாம். விடுதியில் சேர மாணவ, மாணவிகளின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். விடுதியிலிருந்து மாணவர் குடியிருப்பு 5 கி.மீ. தொலைவுக்கு மேல் இருக்க வேண்டும். எனினும், இந்த நிபந்தனை மாணவிகளுக்குப் பொருந்தாது. 
விண்ணப்பப் படிவத்தில் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு, அதில் கல்வி நிறுவனத்தின் சான்றொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும். அனைத்து விடுதிகளிலும் மாணவர்களின் சேர்க்கை புதிய விண்ணப்பப் படிவம் மூலமாகவே விண்ணப்பிக்கப்பட வேண்டும்.  ஒரு விடுதிக்கு தலா 5 நபர்கள் வீதம் அனைத்து விடுதிகளிலும், இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளையும் விடுதியில் சேர்க்கலாம்.
மாணவர்களின் எமிஸ் (உம்ண்ள்) மற்றும் கல்வி உதவித் தொகைக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை எண் குறிக்கப்பட வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு விடுதியில் தரமான உணவு வழங்கப்படுகிறது. மேலும், பாய், போர்வை, தட்டு, டம்ளர் ஆகியவையும் வழங்கப்படும். 
விடுதியில்  சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை பள்ளி, கல்லூரி விடுதிக் காப்பாளர்களிடமிருந்து இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். எனவே, கடலூர் மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவிகள் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com