தண்ணீர் வசதி இல்லாத ஒறையூர் அரசுப் பள்ளி! மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த ஒறையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தண்ணீர் வசதி இல்லாததால், மாணவர்கள், ஆசிரியர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த ஒறையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தண்ணீர் வசதி இல்லாததால், மாணவர்கள், ஆசிரியர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
 ஒறையூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில், ஒறையூர், எனதிரிமங்கலம், அவியனூர், கரும்பூர், குச்சிப்பாளையம், பலாப்பட்டு, ரெட்டிக்குப்பம், கொய்யாதோப்பு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
 தண்ணீர் வசதிக்காக, பள்ளி வளாகத்தில் ஆழ்துளைக் கிணறு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளன. கடும் வறட்சி காரணமாக, ஆழ்துளைக் கிணறு வறண்டதால், இந்தப் பள்ளியில் கடந்த 4 மாதங்களாக தண்ணீர் வசதி இல்லை. இதனால், மாணவ, மாணவிகள் குடிநீருக்காக அருகில் உள்ள வீடுகளை நாடிச் செல்கின்றனர்.
 கழிப்பறைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், ஆசிரியைகளும், மாணவிகளும் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மாணவர்களுக்கு சத்துணவு சமைப்பதற்காக மட்டும் அருகிலுள்ள ஒரு வீட்டில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.
 இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது:
 ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் வறண்டு 4 மாதங்களாகின்றன. கோடை விடுமுறையின்போதே பள்ளி மாணவர்களின் நலன் கருதி, மாற்று ஆழ்துளைக் கிணறு அமைத்து, அதிகாரிகள் தண்ணீர் வசதி செய்து கொடுத்திருக்க வேண்டும். தற்போது பள்ளி திறந்து 23 நாள்களாகியும் இதுநாள் வரையில் தண்ணீர் வசதி செய்து தரவில்லை. தண்ணீர் வசதி இல்லாததால் கழிப்பறைகளை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவிகள், ஆசிரியைகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, அதிகாரிகள் உடனடியாக தண்ணீர் வசதி செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 விரைவில் தீர்வு: இதுகுறித்து கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப.அ.ஆறுமுகம் கூறியதாவது:
 தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தின்போது, ஒறையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு இரண்டொரு நாள்களில் தீர்வு காண்பதாக, அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com