இணைய வழியில் மாற்றுச் சான்று வழங்குவதில் சிக்கல்: மாணவர்கள் தவிப்பு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வித் தகவல் மேலாண்மை இணையதளம் (எமிஸ்) மூலம் மாற்றுச் சான்று வழங்குவதில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வித் தகவல் மேலாண்மை இணையதளம் (எமிஸ்) மூலம் மாற்றுச் சான்று வழங்குவதில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 தமிழகத்தில் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதையடுத்து அந்தந்தப் பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றுகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், 2019-20-ஆம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை, தேர்ச்சி, வேறு பள்ளிக்கு மாற்றம், நீக்கம் குறித்த பதிவுகளை கல்வித் தகவல் மேலாண்மை இணைய தளம் ("எமிஸ்' ) மூலம் மேற்கொள்ள வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.
 அதன்படி, நிகழாண்டு முதல் மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய மாற்றுச் சான்றிதழை "எமிஸ்' இணைய வழியில் பதிவிறக்கம் செய்து வழங்க வேண்டும் என்றும் கல்வித் துறை அறிவுறுத்தியது.
 மாற்றுச் சான்றிதழை முதலில் மே 3-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவித்த நிலையில், அதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மே 6-ஆம் தேதியாக மாற்றப்பட்டது.
 இந்த நிலையில், பிளஸ் 2 மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் பெறுவதற்காக பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை வந்தனர்.
 இதையடுத்து அந்தந்த பள்ளி நிர்வாகத்தினர் "எமிஸ்' மூலமாக மாற்றுச் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்ய முயன்றபோது, மாணவர்களின் அங்க அடையாளங்கள் உள்ளிட்ட சில தகவல்கள் தவறாக வந்தனவாம். அதனால், மாணவர்களுக்கு மாற்றுச் சான்று வழங்குவதை பள்ளி நிர்வாகத்தினர் நிறுத்தி வைத்துள்ளனர்.
 இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: "எமிஸ்' மூலமாக மாற்றுச் சான்றிதழை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் தவறுகளை எங்களால் சரி செய்ய முடியவில்லை. கையால் எழுதப்பட்ட மாற்றுச் சான்றிதழ்கள் தயார் நிலையில் உள்ளன. ஆனால், "எமிஸ்' வழியாகத்தான் மாற்றுச் சான்றுகளை வழங்க வேண்டும் என கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
 இதில் தொழில் நுட்ப ரீதியாக பல பிரச்னைகள் உள்ளதால் கடலூர் மாவட்டத்தில் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால், மேல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகள் மாற்றுச் சான்றிதழ் கிடைக்காமல் தவித்து வருகின்றனர் என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com