முளைப்புத் திறனற்ற விதை நெல் விநியோகம்! விவசாயிகள் கவலை

குறிஞ்சிப்பாடி வேளாண்மை விரிவாக்க மையம், தனியார் விதை விற்பனைக் கடைகளில் விற்கப்பட்ட விதை நெல் ரகங்கள் முளைப்புத் திறனற்ற வகையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

குறிஞ்சிப்பாடி வேளாண்மை விரிவாக்க மையம், தனியார் விதை விற்பனைக் கடைகளில் விற்கப்பட்ட விதை நெல் ரகங்கள் முளைப்புத் திறனற்ற வகையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
 மண், நீர் வளம் கொண்ட குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. இங்கு நெல், கரும்பு, மணிலா, வாழை உள்ளிட்ட பயிர்கள் செழித்து வளர்கின்றன. இந்த வட்டாரத்தில் குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு, ஆடூர்அகரம், கண்ணாடி, தையல்குணம்பட்டினம், ரங்கநாதபுரம், சேராக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடிக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்காக, விவசாயிகள் விதை நெல்லை விலைக்கு வாங்கி நாற்று விடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
 இந்த நிலையில், குறிஞ்சிப்பாடி வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் தனியார் விதை விற்பனைக் கடைகளில் இருந்து வாங்கி விதைக்கப்பட்ட நெல் விதைகளின் முளைப்புத் திறன் சரியில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், தங்களது பணமும், உழைப்பும் வீணாகிவிட்டதாக கவலையுடன் தெரிவித்தனர். இதுகுறித்து அயன்குறிஞ்சிப்பாடி உழவர் மன்றத் தலைவர் ஆர்.கே.ராமலிங்கம் கூறியதாவது:
 குறிஞ்சிப்பாடி வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் தனியார் விதை விற்பனைக் கடைகளில் இருந்து கோ-55, 51, ஐ.ஆர்-50, ஏடிடி-43 ஆகிய ரகங்களைச் சேர்ந்த நெல் விதைகளை விவசாயிகள் வாங்கி வந்து விதைப்பு செய்துள்ளனர். ஒரு ஏக்கர் நடவுக்கு 30 கிலோ விதை நெல் தேவைப்படும். வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானியம் போக ஒரு கிலோ விதை நெல் ரூ.27-க்கும், தனியார் கடைகளில் ரூ.34-க்கும் விவசாயிகள் வாங்கியுள்ளனர். கடந்த வாரம் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் குறிஞ்சிப்பாடி வேளாண்மை விரிவாக்க மையத்தில் கோ-51 ரக விதை நெல் 10 மூட்டைகள் வரை வாங்கியுள்ளார். தையல்குணாம்பட்டினத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வடலூரில் உள்ள தனியார் கடையில் ஏடிடி-43 ரக நெல் விதைகளை 15 மூட்டைகள் வாங்கியுள்ளார். தற்போது இந்த இரண்டு ரக நெல் விதைகளும் சரிவர முளைக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர் என்றார் அவர்.
 இதுகுறித்து குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குநர் சின்னகண்ணு கூறியதாவது:
 முறைப்படி பரிசோதனை செய்யப்பட்ட விதைகளையே விநியோகம் செய்துள்ளோம். ஆண்டுக்கு 100 டன் விதை நெல் விநியோகம் செய்யப்படுகிறது. மூட்டைகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்படுவதால் அழுத்தம் காரணமாக அடியில் இருக்கும் மூட்டைகளில் இருந்த விதைகளின் முளைப்புத் திறன் குறைந்திருக்கும். அல்லது, வெயிலின் தாக்கத்தால் முளை குருத்து கருகி விதைப்புத் திறன் குறைந்திருக்கலாம். மூன்று இடங்களில் விதை விநியோகம் செய்துள்ளோம். அந்தப் பகுதிகளில் நெல் விதைகளின் முளைப்புத் திறனை ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளேன். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏதேனும் ஒரு திட்டத்தில் இழப்பை ஈடுசெய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com