குடிநீர்த் தட்டுப்பாடு: பெண்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 21st April 2019 12:55 AM | Last Updated : 21st April 2019 12:55 AM | அ+அ அ- |

குடிநீர்த் தட்டுப்பாட்டை கண்டித்து நெய்வேலி அருகே பெண்கள் காலிக் குடங்களுடன் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெய்வேலி அருகே உள்ள கொள்ளிருப்பு ஊராட்சி, காலனி பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர்த் தட்டுப்பாடு நீடித்து வருகிறதாம்.
இதுகுறித்து கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சிசெயலரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலிக் குடங்களுடன் மந்தாரக்குப்பம்- ஆதாண்டார்கொல்லை சாலைப் பகுதியில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பழுதடைந்த குடிநீர் மோட்டாரை உடனடியாக சீரமைத்து தண்ணீர் வசதி செய்துதர வேண்டும், அடிப்படை வசதிகளான சாலை, மின் விளக்கு உள்ளிட்ட வசதிகளை செய்துதர வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.