குடிநீர்த் தட்டுப்பாடு: பொதுமக்கள் சாலை மறியல்

மந்தாரக்குப்பத்தில் குடிநீர் கேட்டு இருவேறு இடங்களில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மந்தாரக்குப்பத்தில் குடிநீர் கேட்டு இருவேறு இடங்களில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கெங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உள்பட்ட வேப்பங்குறிச்சி, அருந்ததி நகர் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதேபோல, வடக்குவெள்ளூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேற்கூறிய பகுதிகளில் வசிப்போருக்கு என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் கடந்த 4 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதனால், கிராம மக்கள் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில், வேப்பங்குறிச்சி, அருந்ததி நகர் பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மந்தாரக்குப்பத்தில் 2-ஆவது சுரங்கம் கேட் எதிரே கடலூர் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல, வடக்குவெள்ளூர் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர், அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த மந்தாரக்குப்பம் போலீஸார், இரு இடங்களிலும் மறியலில் ஈடுபட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அந்தந்தப் பகுதிகளில் குடிநீர் விநியோகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதால்  அனைவரும் கலைந்து  சென்றனர். மறியலால் மேற்கூறிய சாலைகளில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com