கடலூர் மாவட்டத்தில் 20.36 லட்சம் வாக்காளர்கள்: பெண்கள் அதிகம்

கடலூர் மாவட்டத்தில் 20.36 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வாக்காளர் இறுதிப் பட்டியலில்

கடலூர் மாவட்டத்தில் 20.36 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வாக்காளர் இறுதிப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டது. இவர்களில் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான 2019-ஆம் ஆண்டுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் இறுதிப் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ராஜகிருபாகரன் இந்தப் பட்டியலை வெளியிட்டார். 
அதன்படி, கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 20,36,076 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் பெண் வாக்காளர்கள் 10,25,698, ஆண்கள் 10,10,263, இதரர் 115 பேர்களாவர். 
புதிதாக 37 ஆயிரம் பேர் சேர்ப்பு: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் இறுதிப் பட்டியலில் மொத்தம்19,98,686 பேர் இருந்த நிலையில், தற்போது கூடுதலாக 37,390 பேர் வாக்காளர் பட்டியலில் இணைந்துள்ளனர். முன்னதாக, சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் நடைபெற்றபோது 45,579 பேர் தங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கக் கோரி மனு அளித்தனர். பெயர் நீக்கத்துக்கு 5,126 பேரும், திருத்தத்துக்கு 8,421 பேரும், தொகுதிக்குள் இடம்பெயர 3,937 பேரும் மனு அளித்தனர். இதில், இறப்பு காரணமாக 4,006 பேர், இடம்பெயர்வால் 2,022 பேர், இரட்டைப் பதிவாக 1,676 பேர் என மொத்தம் 7,704 பேரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. 
மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதிகபட்சமாக புவனகிரி தொகுதியிலும், குறைந்தபட்சமாக நெய்வேலி தொகுதியிலும் வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்வில் அதிமுக சார்பில் ஆர்.குமரன், திமுக சார்பில் நாராயணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்புராயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வி.குளோப், காங்கிரஸ் சார்பில் என்.குமார், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சுரேஷ் மற்றும் தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். 
முன்னதாக, மாவட்ட வருவாய் அலுவலர் வாக்காளர் பட்டியலை வெளியிட சார்-ஆட்சியர் கே.எம்.சரயு பெற்றுக் கொண்டார். 
ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச.சந்தோஷினிசந்திரா, தேர்தல் வட்டாட்சியர் ப.பாலமுருகன், வட்டாட்சியர்கள் பா.சத்தியன், ஆறுமுகம், விஜயா ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com