வாடகை உயர்வுக்கு எதிர்ப்பு: கடலூரில் தினசரி சந்தை வியாபாரிகள் கடையடைப்பு

கடலூர் முதுநகர் தினசரி சந்தையில் கடைகளுக்கான  வாடகை உயர்வைக் கண்டித்து, வியாபாரிகள் கடையடைப்பு, தர்னா

கடலூர் முதுநகர் தினசரி சந்தையில் கடைகளுக்கான  வாடகை உயர்வைக் கண்டித்து, வியாபாரிகள் கடையடைப்பு, தர்னா போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
கடலூர் நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின்கீழ், கடலூர் முதுநகரில் பக்தவத்சலம் தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. இந்தச் சந்தை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 200 கடைகள் நகராட்சி மூலமாக வாடகைக்கு விடப்பட்டுள்ளன. கடந்த 2016-ஆம் ஆண்டு வரை இந்தக் கடைகளுக்கு மாத வாடகையாக ரூ.300  செலுத்தப்பட்டு வந்ததாம். 
இந்த நிலையில், கடைகளுக்கான வாடகையை நகராட்சி நிர்வாகம் உயர்த்தி அதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
ஆனால், 10 மடங்குகள் வரை கடை வாடகை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஓராண்டுக்கான வாடகையை நகராட்சி நிர்வாகம் முன்பணமாக செலுத்த வலியுறுத்துவதாகவும் கூறி வியாபாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நகராட்சி நிர்வாகத்துக்கு சாதகமாக உத்தரவு வந்துள்ளது. இதை எதிர்த்து வியாபாரிகள் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடைகளுக்கான உயர்த்தப்பட்ட வாடகையை வியாபாரிகள் செலுத்த வேண்டுமென நகராட்சி நிர்வாகம் வலியுறுத்துவதை எதிர்த்து வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை தங்களது கடைகளை அடைத்து தர்னாவில் ஈடுபட்டனர். 
அப்போது, நகர்நல அலுவலர் அரவிந்த்ஜோதி, வருவாய் ஆய்வாளர் சுகந்தி, நகரமைப்பு அலுவலர் தயாநிதி ஆகியோர் வாடகை வசூலுக்காக அந்தப் பகுதிக்குச் சென்றனர்.
அங்கு வாடகை பாக்கி செலுத்தாத கடைக்கு பூட்டுப் போட்டு சீல் வைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். 
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இதுகுறித்து தகவல் தெரியவந்ததால் அவர்கள் விரைந்து வந்து, நகராட்சி அலுவலர்களால் கடைக்கு போடப்பட்ட பூட்டை உடைத்ததோடு அவர்களை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த கடலூர் முதுநகர் காவல் துறையினர் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து நகராட்சி அலுவலர்களை மீட்டனர். 
பின்னர், வியாபாரிகள் தங்களது கோரிக்கையை குழு அமைத்து நகராட்சியிடம் வலியுறுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. 
இதையடுத்து, வியாபாரிகள்  சிலர் நகராட்சி அலுவலகத்துக்கு சென்று மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com