"பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சட்டப்படி விடுதலை செய்ய வேண்டும்'

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சட்டத்தின்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சட்டத்தின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கேட்டுக் கொண்டார்.
7 பேரின் விடுதலை தொடர்பாக கடலூரில் ஞாயிற்றுக்கிழமை அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகளை சந்தித்து அற்புதம்மாள் ஆதரவு திரட்டினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக அரசு விதி எண் 161-ஐ பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தின் கோப்பு ஆளுநருக்கு அனுப்பி வைத்து 6 மாதங்களாகியும் அவர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக ஏற்கெனவே ஆளுநரை சந்தித்து வலியுறுத்திய நிலையில், மீண்டும் அவரைச் சந்திக்க சட்டத்தில் இடமில்லையாம். எனவே, மக்களை சந்திக்க முடிவெடுத்து இதுவரை 16 மாவட்டங்களில் மக்களை சந்தித்துள்ளேன்.
இதுதொடர்பாக, மார்ச் 9-ஆம் தேதி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், புதுச்சேரி ஆகிய இடங்களில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறுகிறது. தமிழக ஆளுநர் சட்டத்தை மதித்து 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.
மும்பை குண்டுவெடிப்பில் 254 பேர் உயிரிழந்த வழக்கில் கைதான திரைப்பட நடிகர் 5 ஆண்டுகளில் வெளியே வந்தார். சிபிஐ விசாரித்த அந்த வழக்கில், அந்த மாநில ஆளுநரே அவரை விடுதலை செய்தார். ஆனால், தமிழகத்துக்கு மட்டும் வேறொரு சட்டம் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, சட்டப்படியான விடுதலையை எதிர்நோக்கியுள்ளோம் என்றார் அற்புதம்மாள்.
ஆதரவு கோரும் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்புகளைச் சேர்ந்த மு.மருதவாணன், 
தி.ச.திருமார்பன், வெண்புறா சி.குமார், வ.கடல்தீபன், புஷ்பராஜ், எஸ்.என்.கே.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com