கடலூர், சிதம்பரம் பகுதிகளில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

 கடலூர் நகராட்சிப் பகுதியில் 200 கிலோ நெகிழிப் பொருள்களை நகராட்சி அலுவலர்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.


 கடலூர் நகராட்சிப் பகுதியில் 200 கிலோ நெகிழிப் பொருள்களை நகராட்சி அலுவலர்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
மறுமுறை பயன்படுத்த முடியாத 14 வகையான நெகிழிப் பொருள்களுக்கு தமிழகத்தில் ஜனவரி 1 -ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து அரசின் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வர்த்தக நிறுவனங்களில் விற்பனைக்கும், பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காகவும் வைக்கப்பட்டுள்ள நெகிழிப் பைகள் உள்ளிட்ட பொருள்களைப் பறிமுதல் செய்யும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, கடலூர் நகராட்சிக்கு உள்பட்ட வண்டிப்பாளையம் சாலை, சின்னவாணியர் தெரு, பேருந்து நிலையம், பூக்கடை ஆகிய பகுதிகளில் கடலூர் பெருநகராட்சி ஆணையர் க.பாலு தலைமையில், நகர்நல அலுவலர் ப.அரவிந்த்ஜோதி, சுகாதார ஆய்வாளர்கள் எஸ்.பாக்கியநாதன், பி.சிவா, எஸ்.மணிவண்ணன், ஏ.கிருஷ்ணராஜ் ஆகியோர் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 
அப்போது, சிறு பெட்டிக் கடைகள் முதல் பெரு வர்த்தக நிறுவனங்கள் வரை பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து நகர்நல அலுவலர் கூறியதாவது: தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.  தற்போது, முதல் கட்டமாக சோதனைப் பணியை மேற்கொண்டுள்ளோம். இந்தப் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும். நெகிழிப் பொருள்களை வைத்திருந்தால் ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்க சுகாதார ஆய்வாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 
எனவே, வர்த்தக நிறுவனங்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், சிறு வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரும் நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.
சிதம்பரத்தில்... 
சிதம்பரம் நகரில் நகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு, 600 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
ஒரு முறை பயன்படுத்திவிட்டு, தூக்கி எறியக் கூடிய நெகிழிக் பொருள்களால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் விதமாக தமிழக அரசு அந்தப் பொருள்களின் பயன்பாட்டுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் தடை விடுத்தது. 
இதையடுத்து, சிதம்பரம் நகராட்சி ஊழியர்கள், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைச் சேகரித்து அழிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி, புதன்கிழமை சிதம்பரம் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகள், வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு, தனியார் அலுவலகங்கள், சிறு வியாபாரிகள், மருத்துவமனைகள், துணிக் கடைகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் பயன்பாடு உள்ளதா எனக் கண்காணித்து, அவற்றைப் பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம் நகராட்சி மின் கண்காணிப்பாளர் சலீம் தலைமையில், சுகாதார ஆய்வாளர் தர்மராஜ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் ராஜாராம், பாஸ்கர் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் சுதாகர் உள்ளிட்ட  நகராட்சிப் பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு, சிதம்பரம் மேலரத வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள கடைகளில் இருந்த 600 கிலோ நெகிழிப் பொருள்களைப் பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, தொடர்ந்து சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் என  நகராட்சி மின் கண்காணிப்பாளர்சலீம் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com