பயன்பாடில்லாமல் வீணாகும் உளவியல் ஆலோசனை மைய வாகனம்!

கல்வித் துறையில் உரிய பயன்பாடு இல்லாமல் வீணாகி வரும் மாணவர் உளவியல் ஆலோசனை மைய நடமாடும் வாகனத்தைச் செயல்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.

கல்வித் துறையில் உரிய பயன்பாடு இல்லாமல் வீணாகி வரும் மாணவர் உளவியல் ஆலோசனை மைய நடமாடும் வாகனத்தைச் செயல்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.
பள்ளியில் பயிலும் மாணவ, மாணவர்களிடையே ஏற்படும் மனச் சோர்வு, கல்வியில் நாட்டமின்மை, உளவியல் ரீதியான பாதிப்புகள், குடும்பச் சூழல், வளரிளம் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள், சுற்றுப்புறச் சூழல், பாலியல் ஈர்ப்புகள், தேர்வுகள் குறித்த அச்சம், மதிப்பெண் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்கொலை உள்ளிட்ட முரண்பாடான முடிவுகளை எடுக்கின்றனர். மேலும், இந்த வகையான பாதிப்புகளால் கல்வியைப் பாதியிலேயே கைவிடும் நிலையும், தேர்வைப் புறக்கணிப்பது, மதிப்பெண்களை இழப்பது, ஆசிரியர்கள் மீது தாக்குதல் போன்ற தகாத நிகழ்வுகளும் நடக்கின்றன.
இந்தச் சூழலை மாற்றி, மாணவர்களுக்கு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான நிலையை ஏற்படுத்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கும் வகையில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை மூலம் நடமாடும் ஆலோசனை மையம் அமைக்கப்பட்டது.
இதற்காக,  டெம்போ வேனில் எல்சிடி டிவி, ஒலி பெருக்கிகள், சிடி பிளேயர்கள் பொருத்தப்பட்டு, மாதம் ரூ. 30 ஆயிரம் ஊதியத்தில் உளவியல் ஆலோசகரும் நியமிக்கப்பட்டு நடமாடும் ஆலோசனை மையங்கள் கடந்த 2013 - 14 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன.
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களை 10 மண்டலங்களாகப் பிரித்து, முதல் கட்டமாக 10 நடமாடும் ஆலோசனை மையங்கள் தொடங்கப்பட்டன. 
பெரிய கல்வி மாவட்டங்களான விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை ஒருங்கிணைத்து கடலூரை மையாகக் கொண்டு, இந்த மையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அறிவிப்பு வெளியாகி, வாகனமும் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.பழனிச்சாமி கூறியதாவது: 
நடமாடும் உளவியல் ஆலோசனை மைய வாகனத்துக்கான ஓட்டுநர் இல்லை. உளவியில் ஆலோசகரும் இல்லை. அதனால், ஆலோசனை வழங்கப்படவில்லை. இதற்கு மாற்றாக, "அக்னி' என்ற திட்டத்தின் கீழ் தன்னார்வ அமைப்பினரைக் கொண்டு உளவியல் ஆலோசனைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த வாரத்தில் புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.    
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com