7 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்

கடலூர் மாவட்டத்தில் 7 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை மாநில தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.

கடலூர் மாவட்டத்தில் 7 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை மாநில தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், நடைமுறையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் 2 அடி நீள கரும்பு உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கத் தொகை ரூ.1,000 வழங்கிட தமிழக முதல்வர் உத்தரவிட்டார். 
இதன்படி, கடலூரில் சரவணபவ நுகர்வோர் அங்காடி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்  பங்கேற்று, பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை தொடக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:  கடலூர் மாவட்டத்தில் 7,09,400 குடும்ப அட்டைதாரர்களுக்கும், முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் 426 குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. நியாய விலைக் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்த்திட பொங்கல் பரிசு வழங்கப்படும் விவரத்தை மின்னணு அட்டை வாயிலாக விற்பனை முனைய இயந்திரத்தில் பதிவு செய்த பிறகே வழங்கப்படும்.  மின்னணு அட்டை இல்லாத இனங்களில் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டையில் உள்ள நபர்களில் ஏதேனும் ஒருவரின் அசல் ஆதார் அட்டையை "ஸ்கேன்' செய்வதன் மூலமாகவோ அல்லது விற்பனை முனைய இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச் சொல் (ஞபட) அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். உரிய ஒப்புதல் படிவத்தில் கையொப்பம் செய்து பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்றார் அமைச்சர்.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராஜகிருபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் வீ.வெற்றிவேல், துணைப் பதிவாளர் பா.வெங்கடாஜலபதி, வட்டாட்சியர் ப.சத்தியன், நகராட்சி முன்னாள் தலைவர் ஆர்.குமரன், முன்னாள் துணைத் தலைவர் ஜி.ஜெ.குமார், முன்னாள் கவுன்சிலர் வ.கந்தன், கூட்டுறவு சங்க முன்னாள் நிர்வாகிகள் இரா.வெ.பெருமாள்ராஜா, கே.ஆர்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
முன்னதாக, கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளர் சொ.இளஞ்செல்வி வரவேற்க, துணைப் பதிவாளர் மு.ஜெகத்ரட்சகன் நன்றி கூறினார்.

புகார் தெரிவிக்க தொடர்பு எண்கள்

பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் விநியோகம் தொடர்பாக புகார்கள் ஏதுமிருப்பின் அதனைத் தீர்க்க பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையை 04142- 230223 என்ற எண்ணிலும், மாவட்ட வழங்கல் அலுவலரை 94450 00209 என்ற எண்ணிலும் தொடர்புக் கொள்ளலாம்.
வட்டங்கள் அளவில், கடலூர்- 74026 06219, பண்ருட்டி- 98944 42752, குறிஞ்சிப்பாடி-94865 29140, சிதம்பரம்- 94454 77830, காட்டுமன்னார்கோவில்- 99527 12551, புவனகிரி - 94450 29458, திருமுட்டம்- 74026 06221, விருத்தாசலம் -94446 89722, திட்டக்குடி- 94421 01966, வேப்பூர்- 74029 06295 ஆகிய எண்களிலும் தொடர்புக் கொள்ளலாம். இந்தப் பணிகளை கண்காணிக்க கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com