அம்மா இரு சக்கர வாகனத் திட்டம்: பெண்கள் விண்ணப்பிக்கலாம்

அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார்.

அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வரும் மகளிருக்கு 50 சதவீதம் (அதிகபட்ச மானியம் ரூ.25 ஆயிரம்) (மாற்றுத் திறனாளிகள் அதற்கான வாகனம் வாங்குவோருக்கு வாகனத் தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ. 31,250 இதில் எது குறைவோ அந்தத் தொகை மட்டும்) மானியத் தொகையில் இருசக்கர மோட்டார் வாகனம் வழங்கப்படும். 
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வேலை செய்து வரும் மகளிர் 3,705 பேருக்கு 2018-19-ஆம் ஆண்டில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட உள்ளன. 
வாகனங்களை சொந்த நிதி அல்லது வங்கியில் கடன் பெற்று வாங்கலாம். இதற்கான விண்ணப்பங்களை அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். 
18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள், அமைப்பு ரீதியிலான, அமைப்பு சாரா பிரிவில் பணிபுரிவோர், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிவோர், சில்லறை வணிகம் மற்றும் இதர தொழில்களில் பணிபுரியும் மகளிர், அரசு உதவிபெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசுத் திட்டங்கள், சமூக அமைப்பைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 
ஒரு குடும்பத்துக்கு ஒருவருக்கு மட்டுமே வாகனம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும்போது ஓட்டுநர் பயிற்சி சான்று பெற்றிருத்தல் அவசியம். எளிதில் அணுக இயலாத கிராமப் பகுதியில் உள்ளோர், மலைப் பகுதியில் உள்ளோர், ஏழை மகளிரைத் குடும்பத் தலைவராகக் கொண்ட குடும்பங்களைச் சார்ந்தவர்கள், ஆதரவற்ற விதவை, பெண், மாற்றுத் திறனாளிகள், 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள், ஆதிதிராவிடர் பெண்கள், பழங்குடியினர் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பத்துடன் வயது ஆதாரச் சான்று, இருப்பிடச் சான்று, ஓட்டுநர் உரிமச் சான்று, வருமானச் சான்று, பணிசெய்யும் மகளிர் என்பதற்கான சான்று, ஆதார் அட்டை, கல்வி தகுதிச் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன்னுரிமை கோருவதற்கான சான்று, வாகனத்துக்கான விலைப் புள்ளி அல்லது ஒப்படைப்பு விலைப் புள்ளி பட்டியல் ஆகியவற்றை இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பங்கள் வருகிற 18-ஆம் தேதிக்குள் தொடர்புடைய அலுவலகங்களுக்கு சென்றிருக்க வேண்டும். 
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கடலூர் மகளிர் திட்ட அலுவலகத்தை 04142 - 292143 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என அதில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com