பொங்கலுக்குப் பின்னர் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு அமல்: முதன்மைக் கல்வி அலுவலர்

பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் கடலூர் மாவட்ட பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறை அமல்படுத்தப்படுமென முதன்மைக் கல்வி அலுவலர் கா.பழனிச்சாமி கூறினார்.


பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் கடலூர் மாவட்ட பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறை அமல்படுத்தப்படுமென முதன்மைக் கல்வி அலுவலர் கா.பழனிச்சாமி கூறினார்.
கடலூர் மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் தற்போது ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்களின் வருகைகள் அதற்கான பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதில், பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்களின் வருகையைப் பதிவு செய்திட பயோமெட்ரிக் முறையிலான இயந்திரம் பயன்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. 
இதன்படி, கடலூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பயோமெட்ரிக் இயந்திரம் பொருத்தப்படுகிறது. இதையொட்டி, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், கணினி இயக்கத் தெரிந்த ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
காலையில் சிதம்பரம், கடலூர் கல்வி மாவட்டங்களுக்கான கூட்டமும், மாலையில் விருத்தாசலம், வடலூர் கல்வி மாவட்டங்களுக்கான கூட்டமும் நடைபெற்றது. முதன்மைக் கல்வி அலுவலர் கா.பழனிச்சாமி கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: கடலூர் மாவட்டத்துக்கு 615 பயோமெட்ரிக் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவை அனைத்தும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், அனைத்து கல்வி அலுவலகங்களுக்கும் தலா 2 வீதம் வழங்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் அனைத்தும் பள்ளிகளில் பொருத்தப்பட்டு பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறந்ததும் நடைமுறைக்கு வரும் என்றார் அவர். கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் செல்வராஜ், சுவாமி முத்தழகன், திருமுருகன், செல்வக்குமார், ஒருங்கிணைப்பாளர் ப.சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com