ரயில்வே துறையைக் கண்டித்து போராட்டம்

பாதையை மறிக்கும் ரயில்வே துறையைக் கண்டிப்பதாகக் கூறி குப்பன்குளம் பகுதி மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பாதையை மறிக்கும் ரயில்வே துறையைக் கண்டிப்பதாகக் கூறி குப்பன்குளம் பகுதி மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது குப்பன்குளம். இந்தப் பகுதியிலிருந்து திருப்பாதிரிபுலியூர் செல்ல வேண்டுமெனில் ரயில் நிலையத்தின் உள்பகுதி வழியாக தண்டவாளத்தைக் கடந்து செல்ல வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீட்டர்கேஜ் பாதையை அகலப் பாதையாக மாற்றியபோது, இந்தப் பகுதியினர் சென்று வந்த பாதையில் நடைபாதை அமைக்கப்பட்டது. அப்போதே ரயில்வே நிர்வாகம் மாற்று வழியை தேர்வு செய்ய வலியுறுத்தியது. தற்போது, மின்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை முன்னிட்டு குப்பன்குளம், திருப்பாதிரிபுலியூர் பகுதியில் பொதுமக்களால் ஏற்படுத்தப்பட்டிருந்த பாதையை 
ரயில்வே நிர்வாகத்தினர் அடைத்தனர். மேலும், ரயில் நிலையம் முன்பகுதியிலுள்ள காலி இடத்திலிருந்து குப்பன்குளத்துக்குள் நுழையும் பகுதியில் சுவர் எழுப்பும் பணியில் சனிக்கிழமை ரயில்வே நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.
இந்தப் பாதை அடைக்கப்பட்டால் சுமார் 2 கி.மீ. தொலைவு சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதோடு, மருத்துவமனைக்குக் கூட உடனடியாகச் செல்ல முடியாத நிலை உருவாகுமென அந்தப் பகுதியினர் கூறி கட்டுமானப் பணியைத் தடுத்தனர். ஆனால், ரயில்வே பாதுகாப்புப் படையினர் பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் 
திமுக நகர செயலர் கே.எஸ்.ராஜா தலைமையில் திருப்பாதிரிபுலியூர் இரட்டைபிள்ளையார் கோயில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல் ஆய்வாளர் உதயகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். 
இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இருப்பினும் ரயில் நிலையத்துக்குச் சென்றனர். அங்கு தண்டவாளத்தில் அமர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கோ.மாதவன், ஆர்.அமர்நாத், சு.தமிழ்மணி, பால்கி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
பின்னர், காவல் துறை துணை கண்காணிப்பாளர் சாந்தி மற்றும் ரயில்வே துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ஆட்டோ செல்லும் அளவுக்கு வழிவிட்டு சுவர் அமைப்பது என்றும், ஒரு வாரத்துக்குப் பின்னர் பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. 
இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com