ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தம்

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினரின்  வேலை நிறுத்தப் போராட்டத்தால் கடலூர் மாவட்டத்தில் கல்விப் பணியில் செவ்வாய்க்கிழமை பாதிப்பு ஏற்பட்டது. அரசு அலுவலகங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டன.

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினரின்  வேலை நிறுத்தப் போராட்டத்தால் கடலூர் மாவட்டத்தில் கல்விப் பணியில் செவ்வாய்க்கிழமை பாதிப்பு ஏற்பட்டது. அரசு அலுவலகங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டன.
அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தது. இந்தப் போராட்டம் திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதனால் கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. சில பள்ளிகளை ஆசிரியர்கள் பூட்டி விட்டு போராட்டத்தில் பங்கேற்றதால், பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். ஒரு சில பள்ளிகள் மட்டுமே குறைவான ஆசிரியர்களுடன் இயங்கின. கடலூர் மாவட்டத்தில், தொடக்கப் பள்ளிகள் அளவில் 85 சதவீதம் ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதேநேரத்தில் 95 சதவீதம் ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றதாக கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எல்.அரிகிருஷ்ணன் கூறினார்.
வருவாய்த் துறையில் 18 சதவீதத்தினரும், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 58 சதவீத ஆசிரியர்கள், பணியாளர்களும் பணிக்கு வரவில்லையெனவும், மொத்தமாக மாவட்டத்தில் 22.46 சதவீதம் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், வருவாய்த் துறையில் 60 சதவீதமும், கல்வித் துறையில் 90 சதவீதத்தினரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக எல்.அரிகிருஷ்ணன் கூறினார்.
வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் கடலூர், விருத்தாசலம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, வேப்பூர் ஆகிய 10 வட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக புதன், வியாழக்கிழமைகளில் அனைத்து வட்டத் தலைநகரங்களிலும் மறியல் போராட்டமும், வெள்ளிக்கிழமை மாவட்டத் தலைநகரில் மறியல் போராட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்ருட்டி: ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க வட்டத் தலைவர் க.செந்தில்குமார், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டப் பொருளாளர் டி.தேவ பிரபாகரன்தாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் மாவட்டத் துணைச் செயலர் ஜெகன் வரவேற்றார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளார் பா.சீனிவாசன் விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்டப் பொருளாளர் த.ரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேரலாதன் தலைமை வகித்தார். தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்ட செயலர் கனகராசு, ஆசிரியர் மன்ற வட்ட செயலர் மணிவண்ணன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில்500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சிதம்பரம்: சிதம்பரம் வட்டத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் காந்திசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மு.அம்பேத்கர், த.அன்பரசன் ஆகியோர் தலைமை வகித்தனர். நிர்வாகிகள் வெ.வாசுதேவன், பட்டதாரி ஆசிரியர் கழகம் சிவக்குமார், அரசு ஊழியர்கள் சங்கம் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் வே.மணிவாசகம் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மு.ஆ.தமிழ்ச்செல்வன், செல்வகணபதி, சோமு, கார்மேகம் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். இந்தப் போராட்டத்தால் சிதம்பரம் கல்வி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 358 பள்ளிகளில் 210 பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com