சிதம்பரம் பேருந்து நிலையத்தை நவீனமாக்க வேண்டும்: அமைச்சரிடம் எம்எல்ஏ  மனு

சிதம்பரம் நகராட்சி பேருந்து நிலையத்தை நவீன பேருந்து நிலையமாக மாற்ற வலியுறுத்தி

சிதம்பரம் நகராட்சி பேருந்து நிலையத்தை நவீன பேருந்து நிலையமாக மாற்ற வலியுறுத்தி, தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் சென்னையில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் மனு அளித்தார். 
அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது: சிதம்பரம் நகராட்சியில் தற்போது உள்ள பேருந்து நிலையம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் (1978) கட்டப்பட்டது. இங்குள்ள 63 கடைகள், கழிப்பிடம், வாகன நிறுத்துமிடம் மூலம் வருவாய் வருகிறது. சிதம்பரம் பேருந்து நிலையத்துக்கு  தினமும்  சுமார் 300 பேருந்துகளும், சுமார் 15,000 பயணிகளும் வந்து செல்கின்றனர்.
தற்போதுள்ள பழைய பேருந்து நிலையக் கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்தக் கட்டடத்தின் சேதமடைந்த பகுதிகள் இடிந்து விழுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. தமிழ்நாட்டின் பழைமைவாய்ந்த நகராட்சிகளில் ஒன்றும், சிறந்த சுற்றுலா, ஆன்மிக தலமாகவும், மக்கள் அதிகம் வந்துசெல்லும் பகுதியாகவும் உள்ள சிதம்பரத்தில் பழைய பேருந்து நிலையத்தை உடனடியாக இடித்துவிட்டு புதிய நவீன பேருந்து நிலையம் அமைத்துத் தரவேண்டும் என அந்த மனுவில் எம்எல்ஏ கேட்டுக்கொண்டார்.  இந்தச் சந்திப்பின்போது கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலர் அருண்மொழிதேவன் எம்பி, பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com