நோய் பாதித்த மக்காச்சோளத்துக்கு கூடுதல் இழப்பீடு தேவை: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டுமென குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டுமென குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
 கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ராஜகிருபாகரன், வேளாண்மை இணை இயக்குநர் சி.அண்ணாதுரை, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சொ.இளஞ்செல்வி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சு.பூவராகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் பெண்ணாடம் ஆர்.சோமசுந்தரம் பேசுகையில், மாவட்டத்தில் இரண்டு கரும்பு ஆலைகள் செயல்படாத நிலையில் அந்த ஆலைகளுக்காக கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
 சின்னகட்டியங்குப்பம் ஜெயகுரு: தோட்டக்கலை துறை மூலமாக மானாவரி முந்திரியாக 7 லட்சம் கன்றுகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதில் முறைகேடு நடந்துள்ளது.
 வீரசிங்கக்குப்பம் குப்புசாமி: 350 ஏக்கர் பரப்பளவு கொண்ட வயலூர் ஏரியை என்எல்சியிடம் நிதி பெற்று தூர்வார வேண்டும்.
 மேமாத்தூர் அண்ணாதுரை: அமெரிக்க படைப்புழு தாக்குதலால் 3,800 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
 தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோ.மாதவன்: விவசாய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். படைப்புழு தாக்கத்தால் மக்காச்சோள பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, தரமற்ற விதை வழங்கிய நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெற்று நிவாரணம் வழங்க வேண்டும். தற்போது ஏக்கருக்கு ரூ.5,400 ஆக வழங்கப்படும் நிவாரணத்தை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். பாக்கி வைத்துள்ள கரும்பு ஆலைகளை ஜப்தி செய்ய வேண்டும்.
 திருக்கண்டேஸ்வரம் காந்தி: இலவச மின்சாரத்துக்கு வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்பு பட்டியலில் உள்ளன.
 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பெ.ரவீந்திரன்: வீராணம் ஏரியை தூர்வார ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டதில், வடவாற்றை தூர்வார ரூ.10 கோடி செலவிடப்பட்டது. ஆனாலும், தற்போது ஏரி நிரம்பிய நிலையில் மதகுகள் பராமரிக்கப்படாததால் 8 கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, வீராணம் ஏரியை பாதுகாக்க வேண்டும். இதுவரை நடைபெற்ற பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
 பேரூர் காமராஜ்: 24 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளதால் வறட்சிக்கான நிவாரணமும், காப்பீட்டுத் தொகையும் வழங்க வேண்டும். கானூர் ஏரியையும், குண்டுப்பண்டிதன் ஓடையையும் முழுமையாக தூர்வார வேண்டும்.
 விருத்தாசலம் சக்திவேல்: கரும்புகளை சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்புவதில் விவசாயிகளின் கருத்தை மாவட்ட நிர்வாகம் ஏற்பதில்லை.
 காவாலக்குடி முருகானந்தம்: ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள 32 ஏரிகள் மூலமாக 22 ஆயிரம் ஏக்கர்
 நிலங்கள் பாசனம் பெறுகின்றன. எனவே, இந்த ஏரிகளை முழுமையாக தூர்வாருவதோடு, ஏரிகளுக்கு வீராணத்திலிருந்து தண்ணீரை குழாய் மூலமாக எடுத்துச் செல்ல வேண்டும்.
 இவ்வாறு விவசாயிகள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இதற்கு ஆட்சியர் மற்றும் துறை அலுவலர்கள் பதில் அளித்தனர்.
 ஆர்ப்பாட்டம்: கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்கஏஈ பிரதிநிதிகள் அமெரிக்க படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் பயிருக்கு கூடுதல் இழப்பீடு கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com