நெல் அறுவடை இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு; விவசாயிகள் அவதி

நெல் அறுவடை இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயிகள் அவதிக்குள்ளாகின்றனர். 


நெல் அறுவடை இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயிகள் அவதிக்குள்ளாகின்றனர். 
கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி ஆகிய வட்டங்களில் ஆழ்துளை கிணறுகள் மூலமாகவும், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய வட்டங்களில் காவிரி நீர்ப் பாசனம் மூலமாகவும், திட்டக்குடி, வேப்பூர் வட்டங்களில் மழை, ஏரி, குளம் பாசனம் மூலமாகவும் சுமார் 2.32 லட்சம் ஏக்கர் பரப்பில் நிகழாண்டு சம்பா நெல் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 
இதில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஆகிய வட்டங்களில் குறுவை சாகுபடி முடிந்து விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர். வழக்கமாக சம்பா பருவ சாகுபடி அக்டோபரில் தொடங்கி ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முடிந்து அறுவடை நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணையில் தேங்கிய தண்ணீர் முன்கூட்டியே திறக்கப்பட்டு அனைத்து டெல்டா பாசனப் பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டதால் உரிய காலத்தில் சாகுபடி தொடங்கியது. இதனால், கடந்த டிசம்பர் மாத இறுதியிலேயே நெல் அறுவடை தொடங்கிவிட்டது. 
விவசாய தொழிலை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் இணைந்து செய்து வந்த நிலை தற்போது பெரும்பாலும் மாறிவிட்டது. இயந்திரங்கள் மூலமே விவசாயம் செய்ய வேண்டிய கட்டாய சூழல் நிலவுகிறது. விவசாயிகளின் நலன் கருதி சாகுபடி செலவை குறைக்கும் பொருட்டு தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்படி, அதிகமாக நெல் சாகுபடி செய்யப்படும் மாவட்டங்களில் அறுவடை இயந்திரங்களை வாங்கி, வேளாண் பொறியியல் துறை மூலம் டயர் மாடல் அறுவடை இயந்திரத்துக்கு மணிக்கு ரூ.850, பெல்ட் மாடல் அறுவடை இயந்திரத்துக்கு மணிக்கு ரூ.1,145 வீதம் வாடகை நிர்ணயித்து வழங்கப்பட்டது. 
கடந்த 2006-ஆம் ஆண்டு கடலூர் மாவட்ட விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறை சிதம்பரம் உதவி செயற்பொறியாளர் மூலம் பெல்ட் மாடல் அறுவடை இயந்திரமும், கடலூர் உதவி பொறியாளர் கட்டுப்பாட்டில் டயர் மாடல் அறுவடை இயந்திரங்கள் இரண்டும் கொள்முதல் செய்யப்பட்டன. மொத்தம் 3 அறுவடை இயந்திரங்கள் அரசு நிர்ணயித்த குறைந்த வாடைக்கு கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், 3 இயந்திரங்களால் மட்டும் விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் விவசாயிகள் நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. விவசாயிகளின் சிரமத்தை உணர்ந்த அப்போதைய மாவட்ட ஆட்சியர்கள், வேளாண் பொறியியல் துறை மூலம் பக்கத்து மாவட்டங்களிலிருந்து அரசு அறுவடை இயந்திரங்களை வரவழைத்து மாவட்ட விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
இதுகுறித்து விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலர் பெ.ரவீந்திரன் தெரிவித்ததாவது: கடந்த சில ஆண்டுகளாக வெளி மாவட்டங்களில் இருந்து அரசு அறுவடை இயந்திரங்களை வரவழைப்பதில் வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். 
மேலும் கடலூர் மாவட்டத்தில் இயக்கப்பட்ட இயந்திரங்களில் போதிய பராமரிப்பு பணி மேற்கொள்ளாமல் இருந்ததால், கடலூர் உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் இயங்கி வந்த அறுவடை இயந்திரங்கள் அனைத்தும் தஞ்சை மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் மற்ற மாவட்ட நெல் விவசாயிகள் அரசின் அறுவடை இயந்திரங்களை பயன்படுத்தும் வாய்ப்பு இல்லாமல் போனது. கடலூர் மாவட்டத்தில் கடைமடை பாசனப் பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் தற்போது நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் அனைத்து விவசாயிகளும் அறுவடை இயந்திரத்தையே நம்பி உள்ளனர். 
இதுபோன்ற காரணங்களால் தனியார் அறுவடை இயந்திரங்களுக்கு புரோக்கர் கமிஷன் தொகையையும் சேர்த்து அதிக வாடகை நிர்ணயம் செய்கின்றனர். நிகழாண்டில் தனியார் அறுவடை இயந்திரங்களுக்கு டயர் மாடலுக்கு மணிக்கு ரூ.1,600, பெல்ட் மாடல் இயந்திரத்துக்கு மணிக்கு ரூ.2,500 முதல் ரூ.2,800 வரை வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. 
நெல்பயிரில் ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்வது வழக்கம். எனவே, நெல் அறுவடையின்போது உளுந்து விதைகள் சேதமடையாமல் இருக்க பெரும்பாலான விவசாயிகள் பெல்ட் மாடல் இயந்திரத்தையே விரும்புவர். விவசாயிகளின் மன நிலையை அறிந்த தனியார் அறுவடை இயந்திர புரோக்கர்கள் வாடகையை உயர்த்திவிடுகின்றனர். இதனால் விவசாயிகள் வேறு வழியின்றி அதிக வாடகை கொடுத்து நெல் அறுவடை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வாடகை அதிகமாக இருந்தாலும் தனியார் இயந்திரங்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாததால் விவசாயிகள் அவதிக்குள்ளாகின்றனர். 
நெல் சாகுபடியில் பல்வேறு இன்னல்களை சந்திக்கும் விவசாயிகளுக்கான அரசின் திட்டங்கள் நடைமுறையில் இருந்தும் அந்தத் திட்டங்களை பயன்படுத்தும் வாய்ப்பே விவசாயிகளுக்கு இல்லாமல் போகிறது. எனவே, தற்போது முழுவீச்சில் நெல் அறுவடை நடைபெறுவதால் கடலூர் மாவட்ட ஆட்சியர் வேளாண் பொறியியல் துறை மூலம் அரசு அறுவடை இயந்திரங்களை வரவழைத்து, குறைந்த வாடகைக்கு விவசாயிகள் நெல் அறுவடை செய்யும் வாய்ப்பை உருவாக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com