சுவாமி சகஜானந்தா பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

சுவாமி சகஜானந்தா பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

சுவாமி சகஜானந்தா பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
 கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தாவின் 129-ஆவது பிறந்த நாள் விழா அவரது மணி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று சுவாமி சகஜானந்தா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுவாமி சகஜானந்தா வாழ்ந்த இடத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டி தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பின்படி மணிமண்டபம் அமைக்கப்பட்டது. அப்போதே சகஜானந்தா பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. அதனை ஏற்ற ஜெயலலிதா அதன்படி நடத்தப்படும் என்றார். ஆனால், தற்போது மாவட்ட மக்கள்-தொடர்பு அதிகாரி தங்களுக்கு அதற்கான உத்தரவு இல்லை என மறுத்துள்ளார்.
 சமூக பணியாற்றியவர்களுக்கும், சீர்திருத்தவாதிகளுக்கும் அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டால் அவர்களது பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாடுவதுதான் வழக்கம். அரசு சார்பில் அமைக்கப்பட்ட பல மணிமண்டபங்களில் அதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. ஆனால் சுவாமி சகஜானந்தாவுக்கு மட்டும் ஏன் இந்த நிலைப்பாடு எனத் தெரியவில்லை. வரும் ஆண்டுகளில் அவரது பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட மாநில அரசு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும். மணிமண்டப வளாகத்தில் டி.கே.ரங்கராஜன் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.26 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நூலகம் அமைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
 போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முறையில் தீர்வு காண வேண்டும். அதை விடுத்து அவர்களை கைதுசெய்வது சிறையில் அடைப்பது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.
 அரசுக்கு மாணவர்கள் மீது எவ்வளவு அக்கறை உள்ளதோ, அதைத் தாண்டி ஆசிரியர்களுக்கும் உள்ளது. எனவே அரசுதான் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என்றார் அவர்.
 நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கற்பனைச்செல்வம், வாஞ்சிநாதன், மூர்த்தி, முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com