ஆட்சியர் அலுவலகத்தில் மகளுடன் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகள், பேத்தியுடன் மூதாட்டி ஒருவர் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகள், பேத்தியுடன் மூதாட்டி ஒருவர் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
 கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மனு அளிக்க வந்திருந்த ஒரு குடும்பத்தினர் திடீரென ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க முயற்சித்தனர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் மற்றும் காவல் துறையினர் அவர்களை மீட்டனர்.
 பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், புவனகிரி வட்டம் பெரியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தாவீது மனைவி ஆரோக்கியமேரி என்ற விரோணிக்காள் (73), அவரது மகள் மரியாள் (41), பேத்தி சுனிதா (11) எனத் தெரிய வந்தது.
 கணவர் கைவிட்ட நிலையில் விரோணிக்காளுடன் மரியாள் தனது மகன், மகளுடன் வசித்து வருகிறார். இதில், விரோணிக்காளுக்கு அவரது பரம்பரை வழியாக 3 சென்ட் நிலம் தானம் பத்திரம் மூலமாக வழங்கப்பட்டு அதில் குடியிருந்து வருகிறாராம். தற்போது, தேசிய நெடுஞ்சாலைக்காக அந்த நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் நிலம், அதிலுள்ள வீட்டுக்கான இழப்புத் தொகையை மற்றவர்கள் பறிக்க முயல்கிறார்களாம். இவர்களது நிலத்தை போலியாக பதிவு செய்துக்கொண்டு இந்த முயற்சியில் ஈடுபட்டு வருவதாக விரோணிக்காள் புகார் கூறினார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com