பகுதிநேர ஆசிரியர்களை முழுநேர ஊழியராக்க வலியுறுத்தல்

பள்ளிகளை நடத்தி வரும் பகுதிநேர ஆசிரியர்களை முழுநேர ஊழியராக்க வேண்டுமென, தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

பள்ளிகளை நடத்தி வரும் பகுதிநேர ஆசிரியர்களை முழுநேர ஊழியராக்க வேண்டுமென, தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
 தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மேற்கொண்டு வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தினால் 22-ஆம் தேதி முதல் பெருவாரியான தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், மற்ற பள்ளிகள் மூடப்படாமல் தொடர்ந்து இயங்குகின்றன. இதற்கு அப்பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது.
 2012-ஆம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட 16,549 பேரில், தற்போது 12,637 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இவர்கள், வாரத்தில் 3 அரை நாள்கள் வீதம் மாதத்தில் 12 அரை நாள்கள் பள்ளிக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்படும் நிலையிலும், தலைமை ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க சாதாரண நாள்களிலேயே கூடுதல் நாள்களும், கூடுதல் நேரமும் பணியாற்றி வருகின்றனர். 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி, உடல்கல்வி, ஓவியம், இசை, தையல், தோட்டக்கலை, வாழ்வியல் திறன் போன்ற கல்வி இணைச் செயல்பாடுகளை போதித்து வருகின்றனர்.
 தற்போதைய போராட்ட சூழலில் பள்ளிகள் திறந்திருப்பதற்குக் காரணமான பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.7,700 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தமிழக அரசு தற்போது ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் புதிய ஆசிரியர்களை நியமிக்க ஆணையிட்டுள்ளது இவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியதாவது: தமிழக அரசால் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டும் முழுநேர ஊழியர்களாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகிறோம். கடந்த 2015, 16, 17-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போராட்டத்தின் போதும், தற்போதைய போராட்டத்தின் போதும் பள்ளிகளை முழுமையாக நடத்தியது பகுதிநேர ஆசிரியர்கள்தான். எனவே, தமிழக அரசு எங்களுக்கு தற்போதைய சூழலில் முழுநேர வேலை வழங்கி ஆந்திர மாநிலத்தில் வழங்கப்படுவது போன்று ஊதியம் வழங்க வேண்டும்.
 முதல் கட்டமாக தற்போது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ரூ.10 ஆயிரம் ஊதியத்தை வழங்க வேண்டும். ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளிலும், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும்போதும் பகுதிநேர ஆசிரியர்கள் இதர பாடங்களை நடத்தி மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்து வருகின்றனர். 8 ஆண்டுகளாக பள்ளிகளை நடத்தும் அனுபவம் உள்ளதால் முதல் கட்டமாக முழுநேர பணி வழங்க வேண்டும். இதுதொடர்பாக முதல்வருக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com