மாவட்ட ஆட்சியரகத்தில் பெண் தற்கொலை முயற்சி

மாவட்ட ஆட்சியரகத்தில் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்ட ஆட்சியரகத்தில் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
 கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வந்திருந்த பெண் ஒருவர், மனுக்களை பெற்றுக்கொண்டிருந்த மாவட்ட வருவாய் அலுவலர் முன்பாக பிளேடால் தனது கழுத்தை திடீரென கீறிக் கொண்டார். இதனால், அவரது கழுத்திலிருந்து ரத்தம் கசிந்தது. கூட்டரங்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார் உடனடியாக அந்தப் பெண்ணை மீட்டனர்.
 அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வனை சந்தித்தார். அப்போது, அவரிடமிருந்து மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. தங்களது பிரச்னைகளுக்கு முதலில் மனு அளிக்க வேண்டும். அதன்மீது நிர்வாகம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என்று அறிவுரை கூறினார். பின்னர் அந்தப் பெண் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த பெண் திருவந்திபுரம் ஆற்றங்கரை வீதியைச் சேர்ந்த சீனிவாசனின் மனைவி அமுதா (40) (படம்) எனத் தெரியவந்தது. கடந்த ஆண்டு சீனிவாசன் இறந்துவிட்டார்.
 இந்த நிலையில், அவரது சகோதரர்கள் சீனிவாசனுக்கான சொத்து பங்கை வழங்க மறுத்து வருகிறார்களாம். இதனால், அமுதா தனது 2 மகள்களுடன் சிரமப்பட்டு வருவதாகவும், சொத்தில் உரிய பங்கு வேண்டுமென பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com