இளைஞர் உயிரிழப்பு குறித்து  சிபிசிஐடி விசாரணை தேவை: மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இளைஞர் உயிரிழந்தது

காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இளைஞர் உயிரிழந்தது குறித்து சிபிசிஐடி விசாரணை தேவை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: காட்டுமன்னார்கோவில் அருகே உருத்திரசோலை கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி மகன் வினோத் (25). இவரை, சந்தேகத்தின்பேரில் காட்டுமன்னார்கோவில் போலீஸார் விசாரணைக்கு கடந்த புதன்கிழமை அழைத்துச் சென்று, இரவு முழுவதும் காவல் நிலையத்தில் அடைத்து வைத்துள்ளனர்.  மறுநாள் காலையில் வினோத், தான் கட்டியிருந்த வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினர் கூறுவது நம்பும்படியாக இல்லை. 
இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இரவு முழுவதும் வினோத்தை அடித்து சித்ரவதை செய்ததால்தான் அவர் இறந்தார் என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். எனவே, இதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், வினோத் குடும்பத்துக்கு உரிய இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் தமிழக அரசு வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com