காவல் நிலையத்தில் தற்கொலை செய்த  இளைஞரின் உடல் அடக்கம்

காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட இளைஞரின்

காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் சடலம் உடல்கூறாய்வுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டம், ருத்திரசோலை கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி மகன் வினோத் (25). இவர், திருட்டு வழக்கு விசாரணைக்காக காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்துக்கு போலீஸாரால் புதன்கிழமை அழைத்து வரப்பட்டார். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை காவல் நிலையத்தில் வேட்டியால் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 
இதையடுத்து அவரது சடலம் கடலூர் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை உடல்கூறாய்வு செய்யப்பட்டது. பின்னர், உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், ருத்திரசோலை கிராமத்தில் உள்ள விநோத்தின் வீட்டுக்கு அவரது சடலம் மதியம் 1.30 மணியளவில் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, ருத்திரசோலையில் உள்ள மயானத்தில் பிற்பகல் 2 மணியளவில் விநோத்தின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. 
நீதிபதி விசாரணை: 
கடலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற (எண்-3) நீதிபதி அன்வர் சதாத், சம்பவம் நடைபெற்ற காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். வினோத் தூக்கில் தொங்கிய பகுதியை பார்வையிட்ட அவர், சம்பவத்தின்போது பணியிலிருந்த போலீஸாரிடம் விசாரணை நடத்தினார். 
இந்தச் சம்பவம் தொடர்பாக, காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமார், கடலூர் மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபினவ் ஆகியோர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர். இந்த நிலையில், காட்டுமன்னார்கோவில் பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கும் வகையில் டிஐஜி சந்தோஷ்குமார் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நேரில் ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணித்தார். அப்போது, மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபினவ் உடனிருந்தார். 
 இந்தச் சம்பவத்தையொட்டி, காட்டுமன்னார்கோவில் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com