அறிவித்த நாளுக்கு முன்பாகவே ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நிறைவு 

கடலூரில் நடைபெற்று வந்த ராணுவ ஆள் சேர்ப்பு முகாமுக்கு இளைஞர்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால் அறிவித்த நாளுக்கு முன்பாகவே செவ்வாய்க்கிழமை முடித்துக்கொள்ளப்பட்டது.

கடலூரில் நடைபெற்று வந்த ராணுவ ஆள் சேர்ப்பு முகாமுக்கு இளைஞர்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால் அறிவித்த நாளுக்கு முன்பாகவே செவ்வாய்க்கிழமை முடித்துக்கொள்ளப்பட்டது.
 இந்திய ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் கடலூர் மாவட்டம், நெய்வேலியில் ஜூன் 7 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த முகாம், கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்துக்கு மாற்றப்பட்டு கடந்த 7-ஆம் தேதி தொடங்கியது.
 கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுவை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க சுமார் 18,500 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், வேலூர் மாவட்டத்திலிருந்து மட்டும் அதிகபட்சமாக 8 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்தனர்.
 அறிவித்தபடி, மாவட்டங்கள் வாரியாக ஆள் தேர்வு முகாம் கடந்த 7-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமையுடன் முகாம் நிறைவு பெற்றதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. அதாவது, ஆள் தேர்வுக்கான உடல்தகுதித் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், மருத்துவத் தேர்வுகள் மட்டுமே கடலூர் மற்றும் சென்னையில் நடைபெறுகிறது என்று தெரிவித்தனர்.
 இதுகுறித்து ராணுவ உயர் அலுவலர்கள் மேலும் தெரிவித்ததாவது:
 வழக்கமாக 8 மாவட்டங்கள் பங்கேற்கும் முகாமில் சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்வார்கள். ஆனால், இந்த முகாமில் பங்கேற்க 19 ஆயிரத்துக்கும் குறைவான நபர்களே விண்ணப்பித்தனர். அதிலும், பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 75 சதவீதமாகவே இருந்தது. ராணுவத்தில் பணிபுரிவோருக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இருப்பினும், தமிழகத்தில் அதுகுறித்து போதுமான புரிதல் இல்லாததை உணர முடிகிறது. கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய மாவட்டங்கள் என்று கூறுகிறார்கள்.
 ஆனாலும், ஏன் இளைஞர்கள் ராணுவத்தில் இணைந்து தங்களது பொருளாதாரம், சமுதாய அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள முன்வருவதில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது.
 பிளஸ்2 கல்வித் தகுதியே போதுமானது என்று அறிவித்த நிலையிலும் குறைந்த எண்ணிக்கையிலான இளைஞர்கள் மட்டுமே பங்கேற்றது வருத்தமாக உள்ளது.
 ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு என்பது முழுக்க முழுக்க தகுதி, திறமை அடிப்படையிலானது. இதில் பரிந்துரைக்கோ, பணத்துக்கோ இடமில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com