"காவிரி மேலாண்மை வாரிய உத்தரவை கர்நாடக அரசு மதிக்காதது கண்டனத்துக்குரியது'

காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவை மதிக்காமல் கர்நாடக அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவை மதிக்காமல் கர்நாடக அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
கடலூரில் மாற்றுக் கட்சியினர் தமாகாவில் இணையும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவர் ஞானசந்திரன் தலைமை வகித்தார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் சுமார் 30 பேர் த.மா.கா.வில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:
தமாகா மாவட்டத் தலைவர்கள், பொறுப்பாளர்கள் கூட்டம் வருகிற 16-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து அதிக இடங்களில் வெற்றி பெற வியூகம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும். மேலும், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் முடிவு எடுக்கப்பட உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அறிவித்தது போல, தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக வழங்க வேண்டும். ஆனால், இதை அந்த மாநிலம் மதிக்காதது கண்டனத்துக்குரியது. தமிழகத்துக்கு தண்ணீர் பெற்றுத்தர காவிரி மேலாண்மை வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள  திமுக - காங்கிரஸ் கூட்டணியினர் கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும்.
விவசாயிகளுக்கு எதிராக அரசு எந்தத் திட்டத்தையும் கொண்டுவரக் கூடாது. விவசாயிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் திட்டங்களை கொண்டுவர வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியில் இருந்து அதிக இடங்களைப் பெற்று வெல்வதற்கான பணியை தற்போதே தொடங்க உள்ளோம். மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை மக்கள் நம்பியதால் எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் ஏரி, குளங்களில் உள்ள மண்ணை எடுத்து விவசாயத்துக்கு பயன்படுத்த அதிகாரிகள் எவ்வித நிபந்தனையும் விதிக்கக் கூடாது. நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றார் அவர்.
பேட்டியின் போது, தமாகா மாநில துணைத் தலைவர் வெங்கடேசன், மாநில பொதுச் செயலர் பாஷா, மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ புரட்சி மணி, மாவட்டத் துணைத் தலைவர் ராஜேந்திரன், மாநில ஊடகப் பிரிவு அன்பு,  நிர்வாகிகள் சாம்பசிவம், தங்கவேல், ராஜலிங்கம், வரதன், எழிலன் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com