பெண்ணிடம் நகை பறிப்பு: இருவர் கைது
By DIN | Published On : 23rd June 2019 12:54 AM | Last Updated : 23rd June 2019 12:54 AM | அ+அ அ- |

பெண்ணிடம் நகை பறித்தது தொடர்பாக இருவர் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.
திட்டக்குடி அருகே உள்ள பட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் மனைவி சாந்தி (31). இவர் கடந்த 18-ஆம் தேதி தனது மகனுடன் மிதிவண்டியில் சென்றபோது, எதிரே பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவரைத் தாக்கி நகையை பறித்துச் சென்றனர்.
அப்போது, அங்கு பொதுமக்கள் திரண்டதும் திருடர்கள் பைக்கை அங்கேயே விட்டு தப்பியோடினர். இதுகுறித்து ஆவினங்குடி போலீஸார் வழக்குப் பதிந்து, பைக்கை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், சனிக்கிழமை காவல் ஆய்வாளர் ஸ்ரீப்ரியா, உதவி ஆய்வாளர் அசோகன் உள்ளிட்டோர் அந்தப் பகுதியில் வாகனக் தணிக்கையில் ஈடுபட்டபோது சந்தேகத்துக்கிடமாக வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் பெண்ணாடம் இந்திரா நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சக்திவேல் (26), அய்யனார்கோவில் தெருவைச் சேர்ந்த ரவி மகன் வீரா (19) ஆகியோர் என்பதும், இவர்கள்தான் பட்டூரில் சாந்தியிடமிருந்து நகையைப் பறித்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்து நடத்திய விசாரணையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவரிடமிருந்து நகை பறித்ததையும், பட்டூரில் விட்டுச்சென்ற பைக்கை அரியலுôர் மாவட்டம், கோட்டைக்காடு பகுதியை சேர்ந்த ராஜாராம் என்பவரிடம் திருடியதையும் ஒப்புக்கொண்டராம்.
அவர்களிடமிருந்து 7 பவுன் தங்க நகைகள், 2 பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட போலீஸாருக்கு திட்டக்குடி துணைக் கண்காணிப்பாளர் குணசேகரன் பாராட்டுத் தெரிவித்தார்.