மனிதச் சங்கிலி போராட்டம்: திமுக கூட்டணி ஆலோசனை

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான மனிதச் சங்கிலி போராட்டம் குறித்து கடலூரில் திமுக கூட்டணியினர் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினர்.


ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான மனிதச் சங்கிலி போராட்டம் குறித்து கடலூரில் திமுக கூட்டணியினர் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினர்.
 கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்தை எதிர்த்து, நம்மாழ்வாரின் பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் மனித சங்கிலி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இந்தப் போராட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. 
 இந்த நிலையில், கடலூரில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்துக்கு திமுக மாவட்டச் செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். திமுக தேர்தல் பணிக்குழுச் செயலர் இள.புகழேந்தி, எம்எல்ஏ துரை கி.சரவணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், ஆர்.பெரியசாமி, விசிக மாவட்டச் செயலர் சா.முல்லைவேந்தன், கடலூர் மக்களவை தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன், மதிமுக மாவட்டச் செயலர் ஜெ.ராமலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் கோ.மாதவன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் பி.துரை, தவாக மாவட்டச் செயலர் த.ஆனந்த உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) மாலை 5 மணியளவில் நடைபெறும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் கூட்டணிக் கட்சியினர் அனைவரும் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது. மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்வது. 
கடலூர், சிதம்பரம் மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ கோ.ஐயப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திமுக நகரச் செயலர் கே.எஸ்.ராஜா நன்றி கூறினார்.
மனிதச் சங்கிலிக்கு ஆதரவு: இதேபோல, ஹைட்ரோ கார்பன், சாகர்மாலா திட்ட எதிர்ப்பு இயக்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வெண்புறா சி.குமார், அரசுப் பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலர் எம்.சேகர், விசிக மாநில அமைப்பு செயலர் தி.ச.திருமார்பன், மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் து.பாலு, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில்,ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கடலூரில் அண்ணா பாலம் அருகே நடைபெறும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான மனிதச் சங்கிலியில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com