நியாய விலைக் கடை பணியாளர்கள் ஆக.8-இல் வேலைநிறுத்தம்
By DIN | Published On : 24th June 2019 07:39 AM | Last Updated : 24th June 2019 07:39 AM | அ+அ அ- |

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்று கட்ட போராட்டங்களில் ஈடுபடவும், இதன் ஒரு பகுதியாக, வருகிற ஆக.8-ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும் தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் ஜெயச்சந்திரராஜா, கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 1,300 நியாயவிலைக் கடைகளும், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் 600 நியாயவிலைக் கடைகளும், கூட்டுறவுத் துறை மூலம் 22,900 நியாயவிலைக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன.
இதில் நுகர்பொருள் வாணிபக் கழக நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு மட்டும் அரசு உதவியாளருக்கு நிகரான ஊதியமும், எடையாளருக்கு அலுவலக உதவியாளருக்கு நிகரான ஊதியமும் வழங்கப்படுகிறது.
ஆனால், கூட்டுறவுத் துறை நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு தொகுப்பூதியமாக குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. எனவே, நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
கடைகளுக்கு வழங்கும் பொருள்களை சரியான எடையில் பாக்கெட்டுகளில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். அதனடிப்படையில், கோரிக்கைகளுக்கு தீர்வு காண தமிழக அரசு 7 பேர் கொண்ட குழுவை அறிவித்தது. அந்தக் குழுவின் விசாரணை முடிவுற்று அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தும் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.
எனவே, இதனைக் கண்டித்து சங்கம் சார்பில் 3 கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளோம். அதன்படி, வருகிற ஜூலை 5-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டமும், ஜூலை 22-ஆம் தேதி ஊர்வலமும், ஆக.8-ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டமும் நடத்த உள்ளோம் என்றார் அவர்.