முந்திரி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 25th June 2019 08:43 AM | Last Updated : 25th June 2019 08:43 AM | அ+அ அ- |

முந்திரி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என கடலூர் மாவட்ட முந்திரி தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்தது.
இந்தச் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம், பண்ருட்டியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. சிஐடியூ மாவட்ட துணைத் தலைவர் கே.சாவித்திரி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.திருஅரசு, இணைச் செயலர் வி.திருமுருகன், மாவட்டக்குழு ஆர்.உத்திராபதி, இணைச் செயலர்(முந்திரி) பி.கணேசன், ஏ.நடராஜன், எஸ்.பொன்னம்பலம், ஐ.அருள்மொழி, பி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பண்ருட்டி ஒன்றியச் செயலர் ஆர்.தனபால், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலர் குமரகுரு, கட்டுமான சங்கத் தலைவர் நாட்டாண்மை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், முந்திரி தொழிலுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச கூலியை வழங்க வேண்டும். முந்திரி கொட்டை உடைக்கும் இயந்திரம் வாங்க மானியத்துடன் கடனுதவி வழங்க வேண்டும். முந்திரி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். மேலும், 22 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. 3 மாதங்களில் முந்திரி தொழிலாளர் மாநாடு நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது.