வாக்களிக்க பூத் சிலிப் மட்டும் போதாது: ஆட்சியர்

வாக்காளர்கள் வாக்களிக்க பூத் சிலிப் மட்டும் போதுமானதல்ல என்று கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வெ.அன்புச்செல்வன் கூறினார்.

வாக்காளர்கள் வாக்களிக்க பூத் சிலிப் மட்டும் போதுமானதல்ல என்று கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வெ.அன்புச்செல்வன் கூறினார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 மக்களவைத் தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும், அமைதியாகவும் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதிகள் அடங்கியுள்ளன. இதில், 20,36,076 வாக்காளர்கள் உள்ளனர். வாக்களிக்க ஏதுவாக ஒரு கி.மீ. தொலைவுக்கு ஒரு வாக்குச்சாவடி இருக்கும் வகையில் 2,300 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன.
 வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய நாள்களில் வாக்காளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பூத்சிலிப் வழங்கப்படும். அதில், வாக்காளரின் புகைப்படம் இடம் பெற்றுள்ள போதிலும் அதனை மட்டுமே அடையாளமாக எடுத்துக் கொள்ளப்படாது. கூடுதலாக, வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். இல்லையெனில், இந்திய தேர்தல் ஆணையம் 11 ஆவணங்களை அடையாளமாக எடுத்துச் செல்லலாம் என்று அங்கீகரித்து அறிவித்துள்ளது.
 அதன்படி, கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), மகாத்மாகாந்தி நூறு நாள் வேலைத்திட்ட அட்டை (100 நாள் வேலை), வங்கிக் கணக்கு, வருமான வரி அட்டை, மருத்துவக் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை, ஓய்வூதியருக்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
 வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்பதை 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், சட்டப்பேரவைத் தொகுதி, ஊர், வார்டு ஆகிய விவரங்களை தெரிவித்து தெரிந்து கொள்ளலாம்.
 தேர்தல் தொடர்பான புகார்களை 18004258530 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், சி-விஜில் (ஸ்ரீயஐஎஐக) என்ற செயலி மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com