பத்தாம் வகுப்பு தேர்வு: வடலூர் கல்வி மாவட்டம் முதலிடம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில், கடலூர் வருவாய் மாவட்டத்தில் வடலூர் கல்வி மாவட்டம் முதலிடம் பெற்றது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில், கடலூர் வருவாய் மாவட்டத்தில் வடலூர் கல்வி மாவட்டம் முதலிடம் பெற்றது.
 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதில், கடலூர் மாவட்டத்தில் 430 பள்ளிகளிலிருந்து தேர்வு எழுதிய 35,512 பேரில் 32,975 பேர் தேர்ச்சி பெற்றனர். மாநில அளவில் கடலூர் மாவட்டம் 28-ஆவது இடத்தை பிடித்தது. மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 92.86-ஆக உள்ளது.
 கடலூர் வருவாய் மாவட்டமானது கல்வித் துறையைப் பொறுத்தவரை கடலூர், வடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய 4 கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
 இதில், கடலூர், விருத்தாசலம் கல்வி மாவட்டங்கள் ஏற்கெனவே இருந்த நிலையில் கடந்த கல்வியாண்டு முதல் வடலூர், சிதம்பரம் கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் பொதுத்தேர்வு இதுவாகும்.
 இதில், கல்வி மாவட்டங்கள் அளவில் வடலூர் கல்வி மாவட்டம் 94.51 சதவீதம் தேர்ச்சிப் பெற்று கடலூர் வருவாய் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தது. இதுவரை கடலூர் கல்வி மாவட்டமே முதலிடம் பிடித்து வந்த நிலையில் தற்போது அந்த இடத்தை வடலூர் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தை கடலூர் கல்வி மாவட்டம் 93.5 சதவீத தேர்ச்சியுடன் பிடித்தது. இந்த இரண்டு கல்வி மாவட்டங்கள் மட்டுமே மாவட்ட சராசரி தேர்ச்சி விகிதத்தை விட அதிகமான தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளன. சிதம்பரம் கல்வி மாவட்டம் 92.79 சதவீத தேர்ச்சியையும், விருத்தாசலம் கல்வி மாவட்டம் 90.35 சதவீத தேர்ச்சியையும் பெற்றுள்ளன.
 குறைந்த தேர்ச்சியளித்த நகராட்சிப் பள்ளிகள்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் நகராட்சிப் பள்ளிகள் குறைந்த தேர்ச்சி விகிதத்தை அடைந்துள்ளன. இந்தத் தேர்வை மாவட்டத்தில் 247 அரசுப் பள்ளிகள் உள்பட 430 பள்ளிகளிலிருந்து மாணவர்கள் எழுதினர். இதில், 70 அரசுப் பள்ளிகள் உள்பட 170 பள்ளிகள் 100சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. எனினும், நகராட்சிப் பள்ளிகள் மிகவும் குறைந்த தேர்ச்சி விகிதத்தைப் பெற்றதால் மாவட்ட சராசரி தேர்ச்சி விகிதம் குறைந்தது.
 ஆதி திராவிடர் நலப் பள்ளிகளிலிருந்து மொத்தம் 687 பேர் தேர்வு எழுதியதில் 564 பேர் தேர்ச்சிப் பெற்று 82.10 சதவீதத் தேர்ச்சியை பதிவு செய்தனர். குறைந்த அளவாக நகராட்சி பள்ளிகளிலிருந்து தேர்வு எழுதிய 260 பேரில், 210 பேர் தேர்ச்சிப் பெற்று 80.77 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர். அதேபோல, அரசுப் பள்ளிகளிலிருந்து தேர்வு எழுதிய 15,061 பேரில் 13,502 பேர் தேர்ச்சிப் பெற்று 89.65 சதவீத தேர்ச்சியைப் பெற்றனர்.
 அரசின் முழுமையான நிதி உதவிப்பெறும் பள்ளிகளிலிருந்து தேர்வு எழுதிய 5,753 பேரில் 5,245 பேர் தேர்ச்சி பெற்று 91.17 சதவீதத் தேர்ச்சியை பதிவு செய்தனர். இவ்வாறு அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகள் அனைத்தும் மாவட்ட சராசரி தேர்ச்சி வீதமான 92.86 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சியையே பெற்றுள்ளன.
 அதே நேரத்தில் சமூக நலத் துறை பள்ளியானது 92.86 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளது. அரசின் பகுதி நிதி உதவி பெறும் பள்ளி 94.08 சதவீத தேர்ச்சியையும், சுயநிதிப் பள்ளிகள் (மாநில பாடத் திட்டம்) 97.33 சதவீத தேர்ச்சியையும், சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் 98.86 சதவீத தேர்ச்சியையும் பெற்றுள்ளன. எனவே, அரசின் நேரடிக் கட்டுப்பாடு மற்றும் அரசின் நிதி உதவி பெறும் பள்ளிகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்துக்கு உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com