தண்ணீர் தேடி வந்த மான் கிணற்றில் விழுந்து பலி
By DIN | Published On : 16th May 2019 08:46 AM | Last Updated : 16th May 2019 08:46 AM | அ+அ அ- |

தண்ணீர் தேடி வந்த மான் கிணற்றில் விழுந்து இறந்தது.
கடலூர் மாவட்டம், இராமநத்தம் சுற்று வட்டாரப் பகுதியில் கிருஷ்ணாபுரம் காப்புக்காடு அமைந்துள்ளது. இங்கு, ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. இதனால் மான்கள், காட்டுப்பன்றிகள், நரிகள் உள்ளிட்டவை குடிநீர் தேடி குடியிருப்புப் பகுதிக்கு வருகின்றன.
இந்த நிலையில், புதன்கிழமை புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி லக்கூர் கிராமப் பகுதிக்கு வந்தது. புள்ளிமானை பார்த்த நாய்கள் விரட்டியதில், அவற்றிடமிருந்து தப்பி ஓடிய மான் அங்கிருந்த ஐம்பது அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர், ராமநத்தம் போலீஸார் கிணற்றில் விழுந்த மானை மீட்டனர். எனினும், மான் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, கால்நடை மருத்துவர் மானின் உடலை உடற்கூறாய்வு செய்தார். பின்னர் நாங்கூர் காப்புக் காட்டில் மானின் உடல் புதைக்கப்பட்டது.